சனி, 2 ஜனவரி, 2010

1. பொற்காலத்தின் சொற்கோலங்கள்



டிசம்பர் இருபத்திஆறு, 2009, அன்று தமிழ் இசைச் சங்கத்தில் 'பொற்காலத்தின்  சொற்கோலங்களை'  வரைந்தவர்,  பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இசைச் சங்கத்தின் இசைபேரறிஞர் விருது பெற்ற மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள்.


இவ்வளவு அருமையான நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்பது வியப்பான விஷயம். அரங்கம் நிறைந்ததில் வியப்பில்லை என்றாலும், பல இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் அதிகம் வந்திருந்தது வியப்பான விஷயம். (இவர்களில் பெரும்பாலானோர் செவிலியர் பயிற்சிப்பள்ளி மற்றும் தமிழ் இசைச் சங்கத்தின் இசைக் கல்லூரி மாணவர்கள் என்று தொகுப்பாளர் திரு ப.லட்சுமணன் தெரிவித்தார்.)

இது போன்ற ஒரு நிகழ்ச்சி மூன்று மணி நேரம் நடப்பது பெரிய விஷயம் என்றால், முன்று மணி நேரமும் ரசிகர்கள் இருந்து ரசித்தது அதைவிடப் பெரிய விஷயம். இடையில் பலர் எழுந்து சென்றதைக்கண்டு முதலில் சோர்வு ஏற்பட்டது. ஆனால் எழுந்து சென்றவர்கள் எல்லாருமே திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்து விட்டர்கள். அப்புறம்தான் புரிந்தது - சிலர் எழுந்து சென்றதற்குக் காரணம் இடைவேளயைத் தாமதப் படுத்தியதுதான் என்று!

காலதாமதம் என்பது வழக்கமான ஒரு மரபாகி விட்ட சூழ்நிலையில், நிகழ்ச்சியை இருபது நிமிடம் தாமதமாகத் துவக்கியதற்கும், ஒன்பது மணிக்கு மேல் நீட்டித்ததற்கும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தமிழ் (இசைச் சங்கத்தின்) பண்புக்குத் தலை வணங்க வேண்டும்.

நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்த திரு ப.லட்சுமணன் பற்றி ஒரு சில வார்த்தைகள். 'இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்பைத் துவங்கி, கடந்த முப்பது வருடங்களாக நடத்தி வருபவர் என்பதாலோ என்னவோ, ஒவ்வொரு பாடலைப்பற்றியும் இவரது அறிமுகம் சுருக்கமாகவும், நறுக்குத் தெறித்தாற்போலவும், இலக்கிய நயத்துடனும் இருந்தது. எந்த விதக் குறிப்பும் இல்லாமல், இயல்பாக, சரளமாக, பொருத்தமாக இவர் பேசியது பாராட்டுக்குரியது. ஆனால், இவரது பலவீனமான குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் ஒலித்ததால், அரங்கின் பெரும்பகுதிக்கு இவர் குரல் சென்றடையவில்லை என்பதுதான் குறை. (இவர் மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரத்தின் மூத்த சகோதரர். மெல்லிசை மன்னரிடம் பெருமதிப்பு கொண்ட இவர் மூலம் சிதம்பரம் அவர்களை அணுகி மெல்லிசை மன்னருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். பாரத ரத்னா விருது தருவதில் சிக்கல்கள் இருந்தாலும், தாதா சாகிப் விருதுக்கு நிகராக, மெல்லிசை மன்னரின் பெயரில் திரை இசைக்கான ஒரு விருதை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம். திருமதி சோனியாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், மிகவும் வலுவான நிலையிலும் சிதம்பரம் இருக்கிறார். இது போன்ற சந்தர்ப்ப்ங்கள் கிட்டுவது அபூர்வம்.)

மெல்லிசை மன்னரின் புகழைப் பரப்புவதில் எம் எஸ் வி டைம்ஸ் செய்து வரும் சேவை பற்றித் தனது துவக்க உரையில் குறிப்பிட்ட திரு ப.லட்சுமணன் திரு வைத்தி, திரு முரளி, திருமதி மாலதி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

'அவர்கள் கொடுத்த பட்டியலின்படி பாடல்களை வழங்குகிறேன்' என்று எம் எஸ் வி துவங்கியதும், லட்சுமணன் குறுக்கிட்டு, 'அப்படியெலாம் 'நான் ஆணையிட்டால்' என்று எம் எஸ் வியிடம் பாட்டு வாங்க முடியாது.' என்று சமாளித்தார்.

முதலில் காதல், பாசம் ப்ற்றிய பாடல்கள், பிறகு தத்துவப் பாடல்கள் என்று இருவகைப் பாடல்கள் பாடப்பட்டன.

பாடல்களின் பட்டியலை முதலில் கொடுத்து விடுகிறேன்.

1) இறை வணக்கம் - தேவாரப் பண்.

2) புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (கிருஷ்ண கானம் - தனி ஆல்பம்)

3) கொடியசைந்ததும் (பார்த்தால் பசி தீரும்)

4) தேடினேன் வந்தது (ஊட்டி வரை உறவு)

5) உலகமெங்கும் ஒரே மொழி (நாடோடி)

6) மதுரா நகரில் (பார் மகளே பார்)

7) அவளுக்கென்ன (சர்வர் சுந்தரம்)

8) அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை)

9) ராசாத்தி ஒன்னை (வைதேகி காத்திருந்தாள்)

10) வெத்தல போட்ட பத்தினிப் பொண்ணு (வீரத் திருமகன்)

11) திங்கள் உறங்கிய போதும் (பெற்ற மகனை விற்ற அன்னை)

12) உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? (அசோக் குமார்)

13) உறவு என்றொரு சொல் இருந்தால் (இதயத்தில் நீ)

14) பார் மகளே பார் (பார் மகளே பார்)

15) சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

16) உன்னைத்தான் நான் அறிவேன் (வாழ்க்கைப் படகு)

17) மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (அனுபவி ராஜா அனுபவி)

18) ஆயிரம் பெண்மை மலரட்டுமே (வாழ்க்கைப் படகு)

19) ஒஹோஹோஹோ மனிதர்களே (படித்தால் மட்டும் போதுமா)

20) வீடு வரை உறவு (பாத காணிக்கை)

21) பண்ணின் நேர்மொழியாள் (திருநாவுக்கரசர் தேவாரம்)

22) ராமன் எத்தனை ராமனடி (லக்ஷ்மி கல்யாணம்)

23) ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் (டெல்லி மாப்பிள்ளை)

24) தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே (குழந்தைக்காக)

25) கோதையின் திருப்பாவை (கிருஷ்ண கானம் - தனி ஆல்பம்)

26) அழகு ரசிப்பதற்கே (வாழ்க்கை வாழ்வதற்கே)

27) கேட்டுக்கோடி உருமி மேளம் (பட்டிக்காடா பட்டணமா)

இதில் நான்கு பாடல்கள் மெல்லிசை மன்னரின் பாடல்கள் அல்ல. 'மற்ற இசை அமைப்பாளர்களும் தனக்கு நிகரானவர்கள்தான் என்று எம் எஸ் வி கருதுவதால், அவர்களது பாடல்களையும் இடம் பெறச் செய்ய விரும்புகிறார்' என்ற ப.லட்சுமணனின் விளக்கத்துடன், 'ராசாத்தி ஒன்னை' பாடல் பாடப் பட்டது. ஆனால் இந்தப் பாடல் முடிந்ததுமே, இதே சந்தத்தில் அமைந்த 'சிங்காரப் புன்னகை' என்ற எம் எஸ் வியின் பாடலின் பல்லவியையும், ஒரு சரணத்தையும் அனந்து பாடிக் காட்டிய்துடன், இரண்டு பாடல்களையும் இரண்டு ராகங்களிலும் பாடிக் காட்டினார். 'ஒன்றிலிருந்து ஒன்று வருவது இயல்பு. சந்தம் தான் ஒன்று. ராகங்கள் வேறு' என்று எம் எஸ் வி விளக்கம் அளித்தாலும், சிலரால் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. பெருந்தன்மையுடன் அவர் இந்தப் பாடலை வழங்கியிருந்தாலும், 'இதைச்' சுட்டிக் காட்டத்தான் அவர் இந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டார் என்று சிலர் வாதிடலாம். இந்த ஒப்பிடலை மெல்லிசை மன்னர் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

இது போல, சின்னச் சின்ன ஆசை' பாடல் முடிந்ததும், 'இந்தப் பாடலைப் பற்றி எம் எஸ் வி ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்வார்' என்று ப. லட்சுமணன் எடுத்துக் கொடுக்க, 'என்னை வம்பில் மாட்டி விடரீங்களே' என்றபடியே, 'சின்ன சின்ன ஆசை,' வீடு வரை உறவு,' 'பேசுவது கிளியா,' 'மாம்பழத்து வண்டு' எல்லாமே ஒரே சந்தத்தில் அமைந்தவை என்றாலும், வெவ்வேறு பாவங்களில் அமைந்திருப்பதால், வேறு ராகங்களில் அமைந்தவை என்று எம் எஸ் வி சுட்டிக் காட்டினார். 'வான்மீதிலே' யிலிருந்து 'வா வெண்ணிலா'வை அமைத்ததையும், 'ரகுபதி ராகவ ராஜாராமி' லிருந்து, 'நானோரு காதல் சன்யாசி'யை அமைத்ததையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இந்தத் தகவல்களை அவர் முன்பே மெகா டிவியிலும், வேறு சில மேடைகளிலுலும் சொல்லியிருப்பதால், இவற்றை மீண்டும் சொல்லியிருக்க வேண்டியதில்லை. இதனால், நிகழ்ச்சியின் ஓட்டவேகம் சற்றே குறைந்தது என்பதுதான் உண்மை.

அசோக் குமாரில் இடம் பெற்ற தியாகராஜ பாகவதரின் பாடலும், கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்த டெல்லி மாப்பிள்ளை பாடலும் இடம் பெற்றது தமிழ் இசைச் சங்கத்தின் விருப்பப்படி என்று நினைக்கிறேன். 'இதயம் என்ற விலை கொடுத்து அன்பை வாங்க யாரும் இல்லை' என்ற வரிகளுக்காகவே மட்டும் 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' பாடல் இடம் பெற்றிருக்கும் போலும்! என்னைப் பொருத்த வரை, இதனால், நான்கு எம் எஸ் வி பாடல்கள் குறைந்து விட்டன!

'பண்ணின் நேர்மொழியாள்' என்ற தேவார இசைப் பாடலை இடம் பெறச் செய்ததற்காக மட்டும், தமிழ் இசைச் சங்கத்தைப் பாராட்ட வேண்டும். இந்தப் பாடல் (தொகுப்பு) திருவருட்செல்வர் திரைப் படத்தில் கே வி மகாதேவன் இசையில் சம்பிரதாயமான முறையில் பாடப் பட்டிருக்கிறது. ஆனால் மெல்லிசை மன்னர் இதை மெல்லிசையில் அருமையாக வடித்திருந்தார். சற்றே 'நிலவே என்னிடம் நெருங்காதே' சாயலில் அமைந்திருந்த இந்தப் பாடல் செவிக்கு ஒரு அருமையான விருந்து. மெல்லிசை மன்னர் கம்ப ராமாயணத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை முன்பே இந்த அரங்கின் முன் வைத்திருக்கிறேன். இந்த இனிமையான தேவாரப் பாடலைக் கேட்டபோது, தமிழ் இசைச் சங்கம் போன்ற அமைப்புகள், மெல்லிசை மன்னர்ரின் திறமையை, தேவாரம், திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம் போன்ற தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு இசை அமைக்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பூனைக்கு யார் மணி கட்டுவது?

மெல்லிசை மன்னரின் இசைகுழுவினரான, மெகா தொலைக்காட்சியின் என்றும் எம் எஸ் வி நிகழ்ச்சியில் பங்கு பெரும் அதே பாடகர்களும் (கோவை முரளி, அனந்து, ஜெயஸ்ரீ, கல்பனா), பின்னணி இசைக்குழுவினரும்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள்.. கூடுதலாக கீபோர்டு வாசித்த ராஜன் 'ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான்' பாடலைப் பாடினார். 'தேவன் வந்தான்' பாடலில், டி எம் எஸ் பாடும் வரிகளை ராஜன் பாட, வழக்கமாக டி எம் எஸ்ஸின் குரலை எதிரொலிக்கும் முரளி, சீர்காழியின் குரலை சுவீகரித்துக் கொண்டார்! இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மூன்று மதத்தினரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல் 'தேவன் வந்தானை'த் தவிர வேறு இருக்கிறதா என்ன?

'உன்னைத்தான் நான் அறிவேன்' பாடலைப் பற்றிக் குறிப்பிட்ட லட்சுமணன், 'பெண்மையே பாவம் என்றால், மன்னவனின் தாயாரோ?' என்ற கவிஞரின் அற்புதமான வரிகளை சிலாகித்துப் பேசியபோது, இதே கருத்தை திருமதி மீனாக்ஷி இந்தப்பாடலப் பற்றிய ஆய்வில், நமது தளத்தில் வெளிப்படுத்தியிருந்தது நினைவுக்கு வந்தது!

நுணுக்கமான ராக வேறுபாடுகள், சங்கதிகள், விதவிதமான வாத்தியக் கருவிகளின் இசை எல்லாம் நிறைந்த 'மதுரா நகரில்' பாடலை, ஒரு சில இசைக்கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு மேடையில் வழங்கியது அற்புதம்.

'வீடு வரை உறவு' பாடல் துவங்கியதும், அரங்கத்தில் சற்று முணுமுணுப்பு எழுந்தது (பாடலின் சூழ்நிலை தோற்றுவித்த சங்கடத்தினாலோ என்னவோ!) ஆயினும், மூன்றாவது, நான்காவது சரணங்களுக்கு முன் இணைப்பிசையாக வரும் உச்ச தொனி வாத்திய இசையை வியந்து பெரும் கரவோசை எழுப்பினார்கள் ரசிகர்கள்.

'ஓஹோஹோஹோ மனிதர்களே', 'வெத்தல போட்ட' போன்ற அதிகம் இசைக்கப்படாத பாடல்கள் நிகழ்ச்சியில் இடம் பெற்றது இன்னொரு சிறப்பு. 'வெத்தல போட்ட பத்தினிப் பொண்ணு' போன்ற அருமையான பாடல்கள் மறக்கப்பட்டு வருவது பற்றிய என் ஆதங்கத்தை 'Dusting Gems என்ற தலைப்பில் நம் தளத்தில் வெளிப்படுத்தியிருந்த எனக்கு, இந்நிகழ்ச்சியில் இந்தப்பாடல் இடம் பெற்றது மகிழ்ச்சியளித்தது. பாடலின் இடையே, 'இது ஒரு குத்துப்பாடல்தான். ஆனால் மெலடியுடன் அமைந்தது. பாடல் வரிகளும் அர்த்தமுள்ளவை. கவனியுங்கள்' என்று எம் எஸ் வி சுட்டிக் காட்டினார். இந்தப் பாடல் முடிந்ததும் சிலர் 'ஒன்ஸ் மோர்' கேட்க, 'இப்போதுதான் கஷ்டப்பட்டுப் பாடினார்கள். மறுபடியும் எப்படிப் பாடுவது?' என்றார் எம் எஸ் வி.

வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்று விளக்கும் கவிஞரின் (வாழ்க்கை வாழ்வதற்கே) பாடலை நிகழ்ச்சியின் இறுதிப்பாடலாக, லட்சுமணன் அறிவித்தார். ஆனால் இறுதிப்பாடலாக எம் எஸ் வி விரும்பியது வேறொரு பாடல். அதனால் ஒரு பாடல் போனஸாகக் கிடைத்தது ரசிககளுக்கு!
'ஒரு சென்டிமென்ட்டுக்காக' என்று எம் எஸ் வி சொன்னாலும், 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடலை இறுதிப் பாடலாக அவர் அமைத்ததற்கு இன்னொரு காரணம் இருந்தது. பாடலின் முடிவில், தாள வாத்தியங்களை வைத்து, கர்நாடக இசைக் கச்சேரிகளில் வரும் தனி ஆவர்த்தனம் போல், ஒரு அமர்க்களமான தனி ஆவர்த்தனத்தை நடத்தி விட்டார் மெல்லிசை மன்னர்! இது நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான முத்தாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியில் பெரும்பாலும் மெல்லிசை மன்னர் நின்று கொண்டே இருந்தார். அவ்வப்போது ஸ்டூலில் அமர்ந்தாலும், சில வினாடிகளில் எழுந்து நின்று கைகளை அசைத்து இசைக்குழுவை இயக்கத் தொடங்கி விடுவார். இத்தனைக்கும், இசைக்குழுவை இயக்கத் தனியாக ஒரு நடத்துனர் இருந்தார்! லட்சுமணன் இவர் வயதை எண்பத்திரண்டு என்று குறிப்பிட்டபோது, எம் எஸ் வி உடனே மறுத்து, 'இல்லை இருபத்திரண்டுதான்' என்றார். அவரது சுறுசுறுப்பும், செயல் வீச்சும் அவர் கூறியதை உண்மையாக்கும் விதமாக இருந்தன.

வழக்கம்போல் தன்னைப் பாராட்டிப்பேசுவதை இவர் அனுமதிக்கவில்லை. 'ராசாத்தி ஒன்னை.' பாடலின் சந்தம் பற்றி இவர் விளக்கியபோது, லட்சுமணன், 'எம் எஸ் வி ஒரு கங்கை நதி. கங்கை நதிக்குப் பல கிளைகள் உன்டு. அந்தக் கிளைகளில் பாய்வதும் கங்கை நீர்தான்' என்று சொன்னதும், எம் எஸ் வி உடனே அனந்துவை அழைத்து 'மன்னிக்க வேண்டுகிறேன்' பாடலின் முதல் வரியைப் பாட வைத்தார். பிறகு லட்சுமணனிடம், 'மன்னிக்க வேண்டுகிறேன் நான் ஒன்றும் பெரிதாகச் சாதித்து விடவில்லை. என்னைப் புகழ வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார்.
லட்சுமணன் குறிப்பிட்ட இன்னொரு கருத்து: "நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் அமெரிக்காவில் வசித்தாலும், அவர் பிறந்தது சிதம்பரத்தில்தான். ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் எம் எஸ் வி என்ற பல்கலக் கழகத்தின் மாணவர்தான்."

அரங்குக்கு வெளியே, திரு முரளி, திருமதி மாலதி முரளி, செல்வி லக்ஷ்மி ஆகியோரின் முயற்சியில், பேராசிரியரின் தொகுப்பில் வெளியான நம் நூல் வேகமாக விற்றுக்கொண்டிருந்ததை இடைவேளையின்போது கவனித்தேன்!
'பொற்காலத்தின் சொற்கோலங்கள்" மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் "இசைக்கோலங்களாக" செவிகளுக்கு விருந்தளித்த 2009 டிசம்பர் 26ஆம் நாளின் மாலை நேரம் ஒரு பொற்காலம்தான்.

Review of 2011 program