சனி, 28 ஜூலை, 2012

18. பாடவா டூயட் பாடலை - ஒரு அலசல்

கடந்த சில வாரங்களாக*, தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களில் மெல்லிசை மன்னரின் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சக் கட்டம்தான் 'பாடவா டூயட் பாடலை' நிகழ்ச்சியில், நம் எம்.எஸ்.வி 'மெல்லிசை மன்னராகப்' பங்கேற்றது. இந்நிகழ்ச்சி பற்றிய கருத்துப் பரிமாறல்கள் நமது அரங்கில்** நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே துவங்கி விட்டன.

இந்நிலையில் நண்பர் முரளி இந்நிகழ்ச்சி பற்றி சற்றே விரிவாக அலச வேண்டும் என்று விரும்பினார். இதை இருவர் விவாதித்துக் கலந்து எழுதினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். (என்னைப் பொறுத்தவரை இசையைப் பற்றி நான் 'விவாதிப்பது' என்பது திருவிளையாடல் தருமி போல் கேள்விகள் கேட்பது தான்!) எப்போதும்போல் மற்ற நண்பர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து இந்த அலசலுக்கு வளம் சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

முதல் நாள் (22, ஆகஸ்ட், 2011)
'பாடவா பாடலின்'  'எதிர்பாராத சுற்றில்' 14 இணைகள் பங்கேற்றார்கள். அவர்கள் பாடுவதற்காக, நிகழ்ச்சியின் துணை இயக்குனர் மோகன் எழுதிய 14  பல்லவிகளுக்கு மெல்லிசை மன்னர் மெட்டுப் போட்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பாட வைப்பது நிச்சயமாக ஒரு சவாலான முயற்சிதான்.

முதல் இணை : அஸ்வின், சரயு. இவர்கள் முதலில் எம் எஸ் வியின் திரைப்படப் பாடலைப் பாடித் தங்களைத் தயார் படுத்திக் கொண்டபின், புதிய பாடல் வரிகள் எம் எஸ் விக்குக் கொடுக்கப் பட்டு, அவர் அதற்கு உடனே மெட்டுப் போட்டு இவர்களைப் பாட வைக்க வேண்டும் என்று தொகுப்பாளர் சுஹாசினி விளக்கினார். இந்த முதல் இணை பாடிய பாடல்: பூமாலையில் ஓர் மல்லிகை (ஊட்டி வரை உறவு) 

பிறகு எம் எஸ் வி இசை அமைக்க வேண்டிய பாடல் வரிகளை சுஹாசினி படித்துக் காட்டி,  பாடலை அவரிடம் கொடுத்தார். சுஹாசினி பாடலைப் படிக்கும்போதே அதை உள்வாங்கிக் கொண்டு, பின்னால் இருந்த தபேலா கணபதிக்குத் தாள கதி என்ன என்று சொல்லி விட்டு ஆர்மோனியத்தில் சுருதி சேர்த்துக் கொண்டே பாடவும் துவங்கி விட்டார் மெல்லிசை மன்னர்.  
பாடல் வரிகள் இதோ:

காதலி:  
கனாவென வந்து போகிறாய்
வினாவென வளைந்து போகிறேன்
ஒரு துளியைப்போல விழுந்த கனவு
அலைகளானதே
உன் விழிகள் இரண்டும்
உயிரைச் சுருட்டும் வலைகளானதே

காதலன்: 
கனாவென வந்து போகிறாய்
வினாவென வளைந்து போகிறேன்
ஒரு விதையைப்போல விழுந்த நினைவு
விருட்சமானதே
நீ சிந்தும் சிரிப்பில் இருண்ட உலகும் 
வெளிச்சமானதே.

இனி நிகழ்ச்சி பற்றிய எங்கள் உரையாடலின் தொகுப்பு.

முரளி: இவர்கள் பாடிய 'பூமாலையில்' மெட்டை ஒட்டியே இந்தப் பல்லவிக்கு மெட்டமைத்திருக்கிறார் எம் எஸ் வி.

நான்: ஏன் அப்படி? 

முரளி: போட்டியாளர்கள் பாடிய மெட்டுப் போலவே அமைந்தால் அவர்களுக்குப் பாடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக இருக்கலாம். இவர்கள்   முதலில் பாட வருவதால் கொஞ்சம் படபடப்பாக இருப்பார்கள் என்பதாலும் இருக்கலாம்.

நான்: ஒரு புதிய பல்லவியை எப்படி 'பூமாலையில்' மெட்டில் இசை அமைக்க முடியும்? இவர்கள் 'பூமாலையில்' பாடலைப் பாடியதே திட்டமிட்டுச் செய்யப்பட்டதுபோல் தோன்றாதா?

முரளி: அப்படி இல்லை. இந்த மெட்டை எடுத்துக் கொள்வது அவருக்கு இயல்பானதாகத் தோன்றியிருக்கும்.

நான்: அப்படியானால், எம் எஸ் வி விரும்பியிருந்தால் இந்தப் பல்லவிக்கு வேறு மெட்டிலும் இசையமைத்திருக்க முடியும் என்கிறீர்களா?

முரளி:  நிச்சயமாக. 

நான்: பாடகர்கள் பாடிய ஒரு பாட்டை ஒட்டியே ஒரு புதிய பாடலுக்கு மெட்டுப் போடுவது என்பது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படி அப்படிப் போடுவார் போலிருக்கிறது! 

முரளி: அப்படியேதான். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. இவர்கள் முதலில் பாடியதை வைத்து, இவர்கள் குரல் வளம் எப்படி, இவர்களால் எந்த ரேஞ்சுக்குப் பாட முடியும் என்பதையும் தீர்மானித்து எம் எஸ் வி டியூன் போட்டிருப்பார் .

 நான்: ஓ! ஆச்சரியமாக இருக்கிறது. அறிமுகமான பாடகர்களாக இருந்தால் அவர்கள் குரல் வளம் எப்படி என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். அதற்கேற்ப இசை அமைத்திருப்பார்.  புதிய பாடகர்கள் என்பதால், அவர்கள் குரல் வளத்தை அறிந்து (அளந்து) அதற்கேற்றாற்போல் மெட்டைமைக்கிறார். 'பட்டத்து ராணி' பாடலை சுசீலா பாட வேண்டும் என்று ஸ்ரீதர் விருப்பம்   தெரிவித்தபோது, 'இது எல் ஆர் ஈஸ்வரிக்காகப் போட்ட பாடல். சுசீலாதான் பாட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்தப் பாட்டுக்கு நான் வேறொரு டியூன்தான் போட வேண்டும் என்று எம் எஸ் வி உறுதியாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.  

முரளி: அப்படித்தான். வேறொரு இசையமைப்பாளரின் ஒரு பிரபலமான பாடலில் ஒரு இடத்தில் பாடகி உச்சத்தைத் தொட முடியாமல் திணறுவதை  நீங்கள் கவனித்திருக்கலாம். பாடகர்களின் ரேஞ்ஜ் என்ன என்று அறிந்து கொள்ளாமல் இசை அமைத்தால் இது போன்ற பிரச்னைகள் வரும்!

நான்: இன்னொரு விஷயம் கவனித்தீர்கீளா? பாடல் வரிகளை சுஹாசினி ஒருமுறை படித்ததுமே, தாள கதி எப்படி இருக்க வேண்டும் என்று தபேலா வாசிப்பவருக்குச் சொல்லி   விடுகிறார். 

முரளி: ஆமாம். பாடல் வரிகளைப் படித்தவுடனேயே, வார்த்தைகள் மற்றும் வரிகளின் நீளத்தை வைத்து இதற்கு ஏற்ற தாளம் எது என்று முடிவு செய்து விடுகிறார். அது போல் கதி (வேகம்) எப்படி இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்து விடுகிறார்.

நான்: எல்லாம் ஒரு சில நொடிகளுக்குள்! சுஹாசினி சொன்னதுபோல், ஒரு கொட்டாவி விடும் நேரத்துக்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.

முரளி: அற்புதமான டியூன் இது. 'வளைந்து ..... போகிறேன்' என்ற சொற்கள் வளைந்து போகும் காட்சியைக் கண் முன் காட்டுகின்றன.

நான்: 'கனா' என்பதாலோ என்னவோ பாடல் வரிகளில் ஒரு மயக்க சாயல் தொனிக்கிறது. விழிகள் இரண்டும் என்பதில் கூட அற்புதமான பாவம் இருக்கிறது.

முரளி: ஆமாம். இந்த வார்த்தைகளை எம் எஸ் வி பாடும்போது காட்டும் பாவத்தையும் ஆழத்தையும் பாடகர்களால் பிரதிபலிக்க முடியவில்லை.

நான்: கடைசியில் வரும் ஹம்மிங் மிக அருமை.  

முரளி: ஆமாம். இடைவெளி இல்லாத ஃபாஸ்ட் ஹம்மிங். இந்த ஹம்மிங் பல்லவிக்கு ஒரு நிறைவைக் கொடுக்கிறது.

நான்: இவ்வளவு குறைந்த நேரத்தில் போட்டியாளர்கள் பாடலைக்
கற்றுக் கொண்டு பாடுவது கடினம். மேலும் சில பாடல்கள் எளிமையாகவும், சில கடினமாகவும் இருக்கலாம் என்பதால், இந்தச் சுற்றில் மதிப்பெண்கள் சீராக இருக்கும் என்று சொல்ல முடியாது.

முரளி: நடுவர்கள் மதிப்பெண் வழங்கும்போது இவற்றை யெல்லாம் மனதில் கொள்வார்கள் என்று நம்புவோம்.

நான்: இதே பாடலை பின்னால் வரும் இன்னொரு நிகழ்ச்சியில் எம் எஸ் வி நடுவர்களுக்குக் கற்பிக்கிறார். அப்போது போட்டியாளர்களைப் போலவே (அல்லது சற்று அதிகமாகவே கூட) நடுவர்களும் தடுமாறுவதைப் பார்க்கலாம்.

முரளி:  நடுவர்களுக்குக் கொடுத்த டியூன் இன்னும் சற்றுக் கடினமானது என்று நினைக்கிறேன்.

நான்: நான் கவனிக்கவில்லை. இதே டியூன்தான் என்று நினைத்தேன். அது சரி, பாடலுக்கு டியூன் போட்டு விட்டு அதைப் போட்டியாளர்களுக்கு எம் எஸ் வி சொல்லிக் கொடுத்த பின் அவர்கள் பாடுவதை நடுவர்கள் விமர்சிக்கிறார்கள். இது சரிதானா?

முரளி: வேறு வழியில்லையே!

நான்: சில வரிகளை நடுவர்கள் பாடிக் காட்டுகிறார்கள். அவர்கள் பாடிய விதம் சரிதானா?

முரளி: நடுவர்கள் பாடிக் காட்டும்போதும், கருத்துச் சொல்லும்போதும், எம் எஸ் வி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது அவருக்குத்தான் தெரியும்! இடையில் 'நான் போட்ட டியூன் வேறு, நீங்கள் பாடியது வேறு' என்று சொன்னது  போட்டியாளர்களைப் பார்த்தா அல்லது நடுவர்களைப் பார்த்தா என்று தெரியவில்லை!

நான்: 'கூட இருந்து டியூனை மாத்திடாதீங்க' என்று வேறு சொன்னார்!

முரளி: எப்படியோ, மெல்லிசை மன்னர் இசை அமைப்பதைக் காணக் கிடைத்தது ஒரு பெரிய விஷயம்தான்.

நான்: அவர் ஆர்க்கெஸ்ட்ரேஷன் எப்படிப் போடுவார், அத்தனை                  பேருக்கும் எப்படி instruction கொடுப்பார் என்று பார்க்க வேண்டும்

முரளி: ஆமாம். ஒரு பாட்டையாவது முழுவதாக ஆர்க்கெஸ்ட்ரேஷனோடு போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நான்: எம் எஸ் வியால் இன்றைய இசைப் பாணிக்கு ஏற்ப இசை அமைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.இத்தனை வித்தியாசமன பாடல்களை இன்றைய சூழலிலும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அவர் இசை அமைத்ததைப் பார்த்ததும் மலைத்து விட்டேன்.

முரளி: மெல்லிசை மன்னரின் இசை உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது. அதனால்தான் அவர் இசை contemporary ஆக அமைந்து விடுகிறது. இன்றைய பாடல்களை அவர் எந்த அளவுக்குக் கேட்பாரோ தெரியாது, ஆனால் சூழ்நிலை மாற்றங்களை அவர் உணர்ந்து வருவதால் அவரால் இந்தக் காலச் சூழலுக்கும் எற்ப இசை அமைக்க முடியும்.

நான்: ஆமாம். அவர் இசை அமைத்து முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். இது வெறும் ஒப்புக்காகச் செய்யப்பட்டதாகத் தோன்றவில்லை. அவரது இசையின் இனிமையை உணர்ந்ததால் எற்பட்ட மகிழ்ச்சியில்தான் கைதட்டினார்கள் என்று நினைக்கிறேன்.

முரளி: பாடகர்கள் கூட அவர் இசை அமைத்த வரிகளை அனுபவித்து ஆனந்தமாகப் பாடியதை கவனித்தீர்களா?

நான்: இந்த நிகழ்ச்சியைப் பார்த்த இயக்குநர்கள், தயாரிப்பளர்கள் யாராவது மெல்லிசை மன்னரைத் தங்கள் படத்துக்கு இசையமைக்கப் பயன்படுத்திக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

*Written on September 2, 2011

**MSV Times
  MSV Times Forum