வியாழன், 20 ஜூலை, 2017

34. சூழல் ஒன்று - பாடல் இரண்டு

ஒரு ஊமைப்பெண்ணிடம் அவள் கணவன் தன்  காதலைச் சொல்லும் இரண்டு திரைப்படப் பாடல்கள். - ஒன்று 1966இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த கொடிமலரில் இடம்பெற்ற 'மௌனமே பார்வையால்' என்ற பாடல். மற்றொன்று பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த 'வாழ்வு என் பக்கம்'   படத்தில் இடம்பெற்ற 'வீணை பேசும்'  என்ற பாடல்.

கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் வந்த இரண்டு பாடல்களுமே ஒரே கருப்பொருளைக் கொண்டிருந்தாலும், இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.

முதலில் 'மௌனமே பார்வையால்' பாடலை எடுத்துக் கொள்வோம். இந்தப் பட நாயகியால் எந்த ஒரு ஒலியையும் எழுப்ப முடியாது. மாறாக 'வீணை பேசும்' நாயகியால் 'ம்ம்ம்ம்ம் ..' என்று ஹம்மிங்காவது செய்ய முடியும்.

அதனால்தான் கொடிமலர் பாடலை

'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்'

என்று துவங்குகிறார் கவிஞர். பாட்டுப் பாடச் சொன்னால் நாணத்தினால் தயங்குவது எவருக்குமே இயல்பு. இந்தப் பெண் பார்வையால் பாட்டுப் பாடுவதற்குக் கூட நாணப்படுவாளோ என்று நினைத்து, அப்படி நாணப்பட்டால், ஜாடை மூலம் ஒரு (ஓரிரு) வார்த்தையாவது என்னிடம் பேசு என்கிறான் நாயகன். அவளால் பேச முடியாதது தனக்கு ஒரு பொருட்டே இல்லை, அவள் பார்வையாலும், ஜாடையாலும் பேசுவதே தனக்கு இன்பம்தான் என்று உணர்த்துகிறான்.

(வாழ்வு என் பக்கம் நாயகியால் ஒலி எழுப்ப முடியம் என்பதால் வீணை தென்றல் போன்ற மென்மையான ஒலி எழுப்பும் பொருட்களை அவள் பேச்சுக்கு இணையாகக் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். மெல்லிசை மன்னரும் நாயகி ஹம்மிங் செய்வதாக அமைத்திருக்கிறார்.)

இப்போது சரணத்துக்கு வருவோம்.

அல்லிக்கொடியே உந்தன்
முல்லை இதழும் 
தேன் ஆறு போலப் பொங்கி
வர வேண்டும்.

பொதுவாக இதழ் தேனாறு போலப்  பொங்கி வர வேண்டும் என்றால் இனிமையான சொற்கள் அவள் வாயிலிருந்து வரவேண்டும் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கே நாயகியால் பேச முடியாது என்பதால் நாயகியின் இதழைச்  சுவைக்க வேண்டும் என்ற நாயகனின் விருப்பத்தையே இது குறிக்கிறது. இதன் மூலம் அவளிடம் அவனுக்கு இருக்கும் உடல் ரீதியான கவர்ச்சியை அவன் வெளிப்படுத்துகிறான்!

அங்கம் தழுவும் வண்ணத்
தங்க நகை போல் 
என்னை அள்ளிச் சூடிக்
கொண்டு விட வேண்டும்.

'நான் உன்னைத்  தாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லாமல்  'நீ என்னைச் சூடிக்கொள்ள வேண்டும் 'என்று கூறுவதன் மூலம் அவள் பலவீனமானவள் அல்ல, அவளை யாரும் தாங்கிப் பிடிக்க வேண்டியதில்லை என்பதை அவளுக்கு உணர்த்துகிறான். 'உடலைத்தழுவும் நகைபோல் என்னை நீ சூடிக்கொள்ள வேண்டும்'  என்ற வரியும் முந்தைய வரி உணர்த்திய அவள் உடற்கவர்ச்சியை உறுதி செய்கிறது.

முத்துச் சரமே என்

பக்கம் இருந்தால் 
வேறென்ன வார்த்தை
சொல்ல மொழி வேண்டும்?

நீ பேசாதது எனக்கு ஒரு குறையல்ல. நீ என் அருகில் இருந்தாலே போதும். பேச்சு எதற்கு?

முன்னம் இருக்கும் உன்
சின்ன முகத்தில் 
பல மொழிகள் பாடம் பெற
வர வேண்டும்!

ஆஹா! ஜாக்பாட்  அடித்திருக்கிறார் கவிஞர்.  வாயால்  பேச  முடியாததால் அவள் முகபாவங்களினால்தானே பேச முடியும்? அவள் தன் முகபாவங்களினால் பேசும் பேச்சு இருக்கிறதே,  அந்தப் பேச்சை முழுமையாக எழுத்தில் வடிக்க மொழிகளால் முடியாது. ஏனெனில் எந்த மொழியிலும் அவ்வளவையும் எழுத்தில் வடிக்கும் அளவுக்குச் சொல்வளம் இல்லை. எனவே மொழிகள் இவள் முகத்தை பார்த்து, இவள் முகபாவங்களைப்  படித்து நிறையப்  பாடம் கற்க வேண்டுமாம்!

தன்னால் பேச முடியவில்லையே என்று நினைக்கும் ஒரு பெண்ணுக்கு அவள் கணவனிடமிருந்து இதைவிடச் சிறப்பான பாராட்டோ, அங்கீகாரமோ இருக்க முடியுமா?  பேச முடியாத குறையை எவ்வளவு சிறப்பான  நிறையாக மாற்றி விட்டார் கவிஞர்!

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.


இப்போது இரண்டாவது பாடலுக்கு வருவோம். இங்கே கவியும், இசையும் வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றன.

நாயகியால் ஒலி எழுப்ப முடியும் என்பதால் 'வீணை பேசும்' என்று துவங்கியிருக்கிறார் கவிஞர்.

வீணை பேசும் 
அது மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் 
அது மோதும் மலர்களில் நின்று 

வீணை பேசும். யாரிடம்? அதை மீட்டும் விரல்களிடம். மற்றவர்களிடம் அது பேசாது என்பதால் வீணைக்குப் பேசத் தெரியாது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் வீணையை மீட்டும் விரல்களுக்குத் தெரியுமே (புரியுமே) அது தன்னிடம் பேசுவது!

இதே போல்தான் தென்றலும். தென்றல் மலர்களின் மீது நின்று அவற்றை உரசியபடியே பேசுவதால் தென்றல் பேசுவது மலர்களுக்குத்தான் தெரியும் (புரியும்). மற்றவர்களுக்கு அதன் ம்ம்ம்ம் என்ற ரீங்காரம் மட்டும் வேண்டுமானால் கேட்கலாம்.

அதேபோல் நாயகி 'பேசுவது  நாயகனுக்கு கேட்கும் புரியும். நாயகி ம்ம்ம்ம்  என்று ஒலி எழுப்புவதைக் குறிக்க மென்மையாக ஒலிக்கும் வீணையையும், தென்றலையும் உவமையாகச் சொல்லி இருப்பது எவ்வளவு இயல்பாக, சிறப்பாக இருக்கிறது! பாடலின் இடையிலும், இறுதியிலும்  மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் ஹம்மிங்கைக் கேட்டால் இந்த உவமானங்களுக்கு அவர் ஒலி வடிவம் கொடுத்திருப்பதை புரிந்து கொள்ளலாம்.

நாணம் ஒருவகைக் கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 

பதமான, சுகமான கவிதை வரிகள்! நாணம் பெண்களுக்கே உரித்தான தனிக்கலை! ஆண்களுக்கு அது ஒரு சுகம். மௌனம் ஒரு மொழி - பதமான மொழி. ஆங்கிலத்தில் silence is a subtle language என்பதின் பதமான தமிழ் வடிவம் இது என்று கொள்ளலாம். நாயகி மௌனம் என்ற பதமான மொழியில் பேசும்போது, அவளுக்குப் பேச்சு வராது என்று எப்படிச் சொல்ல முடியும்? நாயகியால் பேச முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அடித்துச் சொல்கிறான் நாயகன்.

தீபம் எப்போது பேசும் கண்ணே? தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே?

சாதாரணமாக வீட்டில் வெளிச்சத்துக்காக ஏற்றி வைத்திருக்கும் தீபத்துக்கும் தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைத்திருக்கும் தீபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபத்துக்கு மதிப்பும் மரியாதையும் உண்டே! தெய்வத்தை நம் கண்களுக்கு காட்டுவதே அந்த தீபம்தானே! 'நீ தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம்.'

தெய்வம் பேசாது. ஆனால் தெய்வத்தின் முன்னே ஏற்றி வைத்திருக்கும் தீபம் பேசும்.(தன்  ஒளியின் மூலம் நம்மை எல்லாவற்றையும் காணச்  செய்யும்.) நீயும் தெய்வமாய் இருந்து  எனக்குப் பல விஷயங்களை உணர்த்துவாய்.

இரண்டாவது சரணத்தில் அது முதல் இரவு என்பதை நினைவு படுத்துகிறான் நாயகன்.

காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் தெரிவது கவிதைக்கலை.
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வில் ஒன்றான பின்னே

வார்த்தை இல்லாத சரசம் இருவரும் காதலில் ஒன்று சேர்வதைக் குறிக்கிறது. இங்கே பேச்சு ஒரு பிரச்னையே இல்லை!

தாய்மை கொண்டாடு

நீ ஒரு தாய் ஆனதும் உனக்கு உன் குறை தெரியாது. (அதை நீ மறந்து விடுவாய்)

பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே!

ஆனால் இதற்குப் பல மாதங்கள் ஆகுமே! அதுவரை என்னையே குழந்தையாக நினைத்து உன் நெஞ்சில் அனைத்து என்னைத் தாலாட்டு.

இந்த இடத்தில் மெல்லிசை மன்னர் தாலாட்டு போன்ற ஒரு ஹம்மிங்கை கதாநாயகி பாடும்படி அமைத்திருக்கிறார். கதாநாயகனும் இந்த ஹம்மிங்கில் இணைந்து கொள்ள,  பாடல் முடிகிறது.

தாலாட்டுக்குப் பிறகு இருவரும் உறங்கி விடுவார்கள் என்பதால் வழக்கமாக எல்லாப் பாடல்களிலும் வருவதுபோல் மீண்டும் பல்லவியைப் பாடச் செய்யாமல் பாடலை இந்த இடத்தில் முடித்து விடுகிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகளைக் கூர்ந்து படித்து அவற்றின் பொருள் அறிந்து இசை அமைக்கும் எம் எஸ் வியின் பாணிக்கு இது இன்னும் ஒரு சான்று.

பாடலைக்  கேட்டு நீங்களும் கொஞ்ச நேரம் மெம்மறந்து இருங்களேன்!