செவ்வாய், 29 செப்டம்பர், 2020

45. ஆதவனின் கதிரில் ஒளிர்ந்த பனித்துளி - எஸ் பி பிக்கு ஒரு அஞ்சலி

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு என் அஞ்சலி.

எஸ் பி பியைத் தமிழ்த் திரையுலகுக்கு சாந்தி நிலையம் படத்தில் வரும் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் வி என்பது அனைவரும் அறிந்தது.

இதற்கு இரண்டு வருடங்கள் முன்பே எஸ் பி பி மெல்லிசை மன்னரைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டு ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைப் பாடிக் காட்டியதையும், மெல்லிசை மன்னர், ‘உன் பாடும் திறனும், குரல் வளமும் சிறப்பாக உள்ளன. ஆனால் உன் தமிழ் உச்சரிப்பு மேம்பட வேண்டும். அதனால் நன்றாகத் தமிழ் கற்றுக் கொண்டு அப்புறம் என்னை வந்து பார்’ என்று கூற, அதன்படி தமிழ் கற்றுக்கொண்டு அவர் மெல்லிசை மன்னரை மீண்டும் சந்தித்தபோது மெல்லிசை மன்னர் அவரை நினைவில் வைத்துக்கொண்டு அவருக்கு வாய்ப்புக் கொடுத்தையும் எஸ் பி பி அவர்கள் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறார்..

1969ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் இடம் பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் முதல் 2004 இல் வெளியான ‘விஸ்வதுளசி’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணம்மா கனவில்லையா’ பாடல் வரை எஸ் பி பிக்குப் பல்வகையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி.

எஸ் பி பியின் குரல் வளம், வன்மை,இசை நுணுக்கங்களை வெளிக்கொணரும் வல்லமை, நெகிழ்வு, பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்தும் குரல் திறன் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் பல பாடல்களை அவருக்குக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. இவற்றைப் பட்டியலிட்டு விவரிக்கப் பல தொடர் பதிவுகளும் இசை நுண்ணறிவும் வேண்டும். 

எஸ் பி பி பல மொழிகளில் பாடி இருக்கிறார், பல இசை அமைப்பாளர்களிடம் பாடி இருக்கிறார். ஆனால் இவை அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் என்பதை மறுக்க முடியாது. ஹிந்தியில் ‘ஏக் து ஜே கேலியே’ படத்தில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு அதன் மூலத் திரைப்படமான ‘மரோ சரித்ரா’ (தெலுங்கு) திரைப்படத்தில் ‘எம் எஸ் வியின் இசையில் அவர் பாடிய பாடல்கள் பெரும் வெற்றி கண்டதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

1969ஆம் ஆண்டு வெளியான ‘பால்குடம்’ படத்தில் எஸ் பி பிக்கு ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற ஒரு அருமையான பாடலைக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. எஸ் பி பி யின் முதல் 10 பாடல்களில் இதுவும் ஒன்று என்று Youube இல் ஒரு அன்பர் குறிப்பிட்டிருக்கிறார். எப்படியும், எஸ் பி பி யின் ஆரம்பக் காலப் பாடல்களில் இது ஒன்று என்பதில் ஐயமில்லை.

எஸ் பி பியின் திறமையை அப்போதே நன்கு உணர்ந்து அதை மெல்லிசை மன்னர் திறம்படப் பயன்படுத்தியிருப்பதை இந்தப் பாடலைக் கேட்டால் உணரலாம். எம் எஸ் வியின் நுணுக்கமான இசை மாறுபாடுகள் நிறைந்த இந்தப் பாட்டை அன்றைய புதுமுகப் பாடகரான எஸ் பி பி ஒரு அனுபவம் வாய்ந்த பாடகரைப் போல் அனாயாசமாகப் பாடி இருக்கிறார்.

அதிகம் கவனிக்கப்படாத இந்தப் பாடல் ஒரு சுவையான இசை விருந்து. பாடலில் மூன்று சரணங்கள். மூன்றும் வெவ்வேறு ராகங்களில்! மூன்றில் பல்லவியையும் முதல் சரணத்தையும் மட்டும்தான் எஸ் பி பி பாடுகிறார். இரண்டாவது மூன்றாவது சரணங்களை சுசீலா பாடுகிறார். ஆயினும் பாடலில் எஸ் பி பி நிறைந்திருக்கிறார்.

பல்லவி மற்றும் ஒரு சரணத்திலேயே பல modulations, இசை நெகிழ்வுகள் ஆகியவற்றை அளித்து எஸ் பி பியின் திறமைக்குத் தீனி போட்டிருக்கிறார் எம் எஸ் வி.. பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டாலே

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினைவாக

என்று சற்றே அதிர்வான தொனியில் துவங்கி,

செண்பகப்பூ வாங்கி வந்தேன்
பெண்முகத்தின் நினைவாக

என்று குரலை உயர்த்தி, ‘உனக்காக’ என்று இன்னும் குரலை உயர்த்தி, பிறகு ‘அன்பே’ என்று குழைந்து, ‘நான் உனக்காக’ என்று மீண்டும் அதிர்வான தொனியில் பாடி….

நான்கு வரிகளுக்குள் இத்தனை வேறுபாடுகளைக் கொண்டு வருவது எம் எஸ் விக்குப் புதிய விஷயமோ, பெரிய விஷயமோ அல்ல. ஆனால் ஒரு புதிய பாடகரிடம் இந்த இசை வேறுபாடுகளை அருமையாக வெளிக் கொணர்ந்ததும், அந்தப் பாடகர் அவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியதும் சிறப்பு.

மூன்று சரணங்கள் மூன்று ராகம் என்னும்போது மூன்று இடையிசைகளும் வேறுபட்டவையாகத்தானே இருக்க வேண்டும்? மூன்றும் எளிமையாக அமைக்கப்பட்ட அருமையான இசைக் கோலங்கள். குறிப்பாக முதல் இடையிசை பல்லவியைக் கையைப் பிடித்து அழைத்து வந்து சரணத்துடன் இணைப்பது போல் அவ்வளவு இயல்பாக இருக்கிறது.

முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி பாடியதும், பாடலில் எஸ் பி பியின் பங்கு நிறைவு பெறுகிறது. தற்போதைக்கு அவருக்கு விடை கொடுத்து விட்டு, பாடலின் பிற அம்சங்களைப் பார்ப்போம். (இறுதியில் மீண்டும் எஸ் பி பிக்கு வருவோம். இந்தப் பதிவே அவரைப் பற்றியதுதானே!)

முதல் சரணம் முடிந்து பல்லவி ஒலிக்கும்போதே, பல்லவியுடன் இணைந்து வில்லனின் சிரிப்பு ஒலிக்கும்போது பாடலின் தளம் மாறுகிறது.

(இந்தப் பாடலைக் கேட்கும்போதே அதன் இசைக் கட்டுமானத்திலிருந்து இது ஒரு நாடகக் காட்சி என்று நாம் அறிந்து கொள்ளலாம். பாடலின் காட்சி youtube காணொலியில் இல்லை. இது சிவகுமார் கீதாஞ்சலி நடிக்கும் ஒரு கல்லூரி நாடக்க் காட்சி என்று youtube இல் ஒரு அன்பர் குறிப்பிட்டிருக்கிறார்.)

வில்லனின் சிரிப்பைத் தொடர்ந்து அதனுடன் இயைந்து இரண்டாவது இடையிசை வருகிறது. காதலில் வில்லன் வந்து விட்டதால் அந்த அபாயத்துக்கு ஏற்ற இடையிசை. அதைத் தொடர்ந்து அனுதாபத்தைத் தூண்டும் இசை. பிறகு இரண்டாவது சரணத்தை ‘அன்பு நிறைக் காதலியே’ என்று தொடங்கி சுசீலா பாடுகிறார். காதலன் எழுதி காதலி படிக்கும் காதல் கடிதம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கடிதங்களுக்கென்று ஒரு இசை வடிவத்தை மெல்லிசை மன்னர் ‘அன்புள்ள மான் விழியே’ பாடலில் ஏற்கெனவே உருவாக்கி இருக்கிறாரே! (பின்னால் வந்த ‘நான் அனுப்புவது கடிதம் அல்ல,’ ‘கண்மணி அன்போடு காதலன்,’ ‘நலம் நலமறிய ஆவல்’ போன்ற கடிதப் பாடல்கள் இந்த வடிவத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டவைதான் என்று இசையமைப்பாளர் தாயன்பன் அவர்கள் கூறியதை நினைவு கூர்கிறேன்) எனவே கடிதத்துக்கேற்ற இசை வடிவத்தில் இந்தச் சரணத்தை அமைத்திருக்கிறார்.

இரண்டாவது சரணம் முடிந்த பின் பல்லவி வரவில்லை. ஏனெனில் இப்போது காதலி அவன் கடித்தைப் படித்து விட்டு மூன்றாம் சரணத்தில் அதற்கு பதில் சொல்லப் போகிறாள். எனவே இங்கு (காதலன் பாடிய) பல்லவி பொருத்தமாக இருக்காது. எப்போதுமே சூழல் பற்றிச் சிந்தித்து இசை அமைப்பவர் அல்லவா மெல்லிசை மன்னர்!

எனவே இரண்டாம் சரணம் முடிந்ததும் இடையிசை, பிறகு மூன்றாம் சரணம். நான் முன்பே குறிப்பிட்டது போல் இந்த இடையிசை இன்னொரு வேறுபட்ட இசை. பழைய புத்தகங்களில், சில சமயம் ஒரு புதிய அத்தியாயம் பழைய அத்தியாயத்தின் சம்பவத்தின் தொடர்ச்சியாக இருந்தால், அத்தியாயத்தின் தலைப்பில் ‘இதுவுமது’ என்று குறிப்பிடுவார்கள். அது போல் இந்த இடையிசை வரப்போகும் சரணம் முந்தைய சரணத்தின் தொடர்ச்சி என்பதைக் குறிப்பிடுவது போல் இருக்கும்!

இந்த மூன்றாவது சரணத்தில் காதலி காதலின் கடிதத்துக்கான தன் பதிலைக் கூறுகிறாள். இதில் வரும்

பனித்துளியின் வாழ்வெல்லாம் சிலகாலம் என்றாலும்

கதிர் வந்து முத்தமிடக் காத்திருக்கும் எந்நாளும்

என்ற வரிகளில் தான் ஒரு காவியக் கவிஞர் என்பதை வாலி நிரூபிக்கிறார். எவ்வளவு அற்புதமான வரிகள்! சங்க இலக்கியம் போல் அல்லவா ஒலிக்கின்றன இவ்வரிகள்!

இறுதியாகக் காதலியின் கையொப்பம்!

இப்படிக்கு

உன் அடிமை

உனை ஆளும் பெண்ணடிமை.

ஆளும் பெண்ணடிமை! எஜமானரை ஆளும் அடிமை. இது காதலில்தான் சாத்தியம். ஆங்கிலத்தில் oxymoron  என்று அழைக்கப்படும் இந்த முரணான சொற்றொடர் வாலியின் ஆளுமைக்கு இன்னும் ஒரு சான்று.

‘MSV என்ற மூன்றெழுத்து இல்லாவிட்டால் வாலி, வாணி, பாலு ஆகிய மூன்று இரண்டெழுத்துக்களும் இல்லை’ என்று வாலி ஒரு முறை குறிப்பிட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.

இங்கே பனித்துளி என்று வாலி எழுதி இருப்பதை எஸ் பி பிக்குப் பொருத்திப் பார்ப்போம். எஸ் பி பி என்னும் பனித்துளி மெல்லிசை மன்னர் என்னும் ஆதவனின் ஒளி பட்டு மிளிர்ந்த்து. பொதுவாக சூரிய ஒளி பட்டதும் பனித்துளி மறைந்து சூரியனின் கதிரில் கலந்து விடும். ஆனால் இந்தப் பனித்துளி ஆதவனின் கதிரால் ஒளியூட்டப்பட்டுப் பல ஆண்டுகள் ஒளி விட்டுப் பிரகாசித்து, பல இசை அமைப்பாளரகளுக்கும் ஒரு பொக்கிஷமாக விளங்கி அவர்கள் பாடலுக்கு உயிரூட்டிக் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தது. 

எஸ் பி பி அவர்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்.