'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' என்று விடுதலைக்காக ஏங்கும் அடிமைகளின் அடிமனதிலிருந்து எழும் சோகம்
'இந்த மன்றத்தில் ஓடி வரும் தென்றலைக் கேட்கின்றேன்' என்ற பாடல் முழுவதும் மென்மையாக வந்து நம்மை வருடிச் செல்லும் தென்றலின் சுகமான ஸ்பரிசம்.
'துள்ளிவரும் சூறைக் காற்றில்' வேகமாக வீசி நம்மைச் சற்றே பின் தள்ளும் புயல் காற்றின் அழுத்தம்
'ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்' என்ற பாடலின் இடையிசையில் ஒலிக்கும் முத்துப் பரல்கள் உரசும் ஓசை.
'முத்துக் குளிக்க வாரீகளா' பாடலைக் கேட்கும்போது கடலில் யாரோ மூழ்கி முத்தெடுக்கும் காட்சி நம் கண்முன்னே விரியும் அற்புதம்.
'செல்லக்கிளியை மெல்லப் பேச'ச் சொல்லும் மெல்லிய தாலாட்டில் ஒலிக்கும் நிசப்த சங்கீதம்.
'மலர்ந்தும் மலராத மொட்டுக்களை'த் தாலாட்டும் பாடல் முழுவதிலும் பரந்து அழுத்தும் சோகம்
'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற ஊக்கச் சொல்லின் விளைவாக, ஆழக்கடலும் சோலையாகும் காட்சி இசை வடிவாக நம் கண் முன்னே விரியும் அற்புதம்.
'போனால் போகட்டும்' பாடலைக் கேட்கும்போது பின்னணியில் ஒலிக்கும் பல்வேறு இயற்கை ஒலிகள் மூலம் நாம் உணரும் மயானச் சூழல்.
'அமைதியான நதியினிலே ஓடம்' பாடலைக் கேட்கும்போதே கவிஞரின் வரிகள் இசைச் சித்திரமாக நம் கண் முன்னே தோன்றும் அதிசயம்.
'தேவன் கோவில் மணி ஓசை'யைக் கேட்கும் எவர்க்கும் தோன்றும் ஆன்மீக உணர்வுகள்.
'பாரப்பா பழனியப்பா' என்ற பாடலைக் கேட்டால் எந்த ஒரு கிராமத்துச் சிறுவனும், 'மாட்டு வண்டி வருகுதப்பா' என்று சொல்லி விடுவான்.
'அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை' என்று காதலர்கள் பாடிக் களிப்பது சாரட்டில் பயணித்தபடிதான் என்பதற்குச் சான்று கூறும் குதிரைக் குளம்படி ஓசையும் அதற்கு இசைவாக ஒலிக்கும் லய நயமும்.
'ராஜாவின் பார்வை' என்று பாடிச் செல்லும் ஜோடி புதுமணத் தம்பதி என்பதால் கல்யாண ஊர்வலம் போல் ஊர்ந்து செல்லும் குதிரை வண்டி.
'கேள்வி பிறந்தது' பாடல் ரயில் எஞ்சினில் துவங்குகிறது என்றால், 'சித்திரை மாதம் பௌர்ணமி நிலவு' ரயில் பெட்டிக்குள்ளிருந்து ரயில் ஓட்டத்துடன் பாடப் படுகிறது. இந்தச் செய்திகளை பாடலின் இசையே சொல்வதுதான் அதிசயம்!
இவை போல் மெல்லிசை மன்னரின் மெய் சிலிர்க்க வைக்கும் இசைக்கோலங்கள் அவரது ஆயிரக்கணக்கான பாடல்களிலும் பரந்து கிடக்கின்றன.
எஸ் பி முத்துராமன் அவர்கள் குறிப்பிட்டது போல் 'அந்த நாள் ஞாபகத்தில்' மூச்சுக் காற்றுக்கு இசையமைத்திருக்கிறார் என்றால், கவிஞர் வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டது போல 'சொன்னது நீதானா'வில் ஒரு பெண்ணின் விம்மலுக்கும் 'அண்ணன் காட்டிய வழியம்மா' வில் காயம் பட்ட மனத்தின் அலறலுக்கும் இசை அமைத்திருக்கிறார் இந்த இசை மேதை.
ஆனால் இவை எல்லாமே வார்த்தைகளோடு இசைந்த இசை. திரைப்படக் காட்சியின் சூழல், பாத்திரங்களின் உணர்வுகள், பாடல் வரிகள், பாடலின் கருத்து ஆகிய அனைத்தையும் உள்வாங்கிய இசை வடிவங்கள் இவை.
'பாடல் வரிகளுக்கு ஏற்ற இசை வடிவமா அல்லது இசை வடிவத்துக்கு ஏற்ற பாடல் வரிகளா?' என்று கவிஞரும், மெல்லிசை மன்னரும் ஒருமுறை விளையாட்டாக நடத்திய ஒரு விவாதத்தின் விளைவாகப் பிறந்ததுதான் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா?' பாடல்.
சில சமயம் கொடி அசையாமலும் காற்றை நாம் உணரலாம். செடி கொடிகள் இல்லாத ஒரு வெளியில் நாம் நிற்கும்போதோ, நடக்கும்போதோ நம் மீது காற்று வீசலாம்.
இசை இல்லாமல் கவிதைகளை அனுபவிக்க முடியும். சொற்கள் இல்லாமல், இசைக்கருவிகள் மூலமோ அல்லது ஹம்மிங் மூலமோ ஒலிக்கும் இசை வடிவங்களை நாம் அனுபவிக்க முடியும்.
அவ்வகையில்தான், திரைப்படத் துறையில் ஓய்வே இல்லாத அளவுக்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த சூழலில், 1970-ஆம் ஆண்டில் Thrilling thematic Tunes என்ற இந்த இசைத் தொகுப்பை உருவாக்கினார் மெல்லிசை மன்னர். இசை வடிவம் அமைக்க அவர் எடுத்துக்கொண்ட 11 கருக்கள் இவை.
1) Reminiscences (நினைவலைகள்): நானிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் உருவான முல்லைப் பண் மோகன ராகத்தின் அடிப்படை என்று கருதப்படுகிறது. முல்லைப் பண்ணின் எளிய ராகவடிவை வயலின், புல்லாங்குழல், டிரம்ஸ், பிராஸ் போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.
2) Fields and Storeys (வயல்வெளியும், கட்டடங்களும்): கிராமப்புற சூழலையும், நகர்ப்புற சூழலையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இசை இது. வயல்வெளிகளுக்கு புல்லாங்குழல் போன்ற வாத்தியங்கள் மிகுந்த folk எனப்படும் கிராமிய இசை, நகர்ப்புறத்துக்கு வயலின், கிடார், டிரம்ஸ் போன்ற இசைகக்ருவிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இசை ஆகிய இரண்டு இசை வடிவங்களும் ஒருங்கே இணைந்து ஒலிக்கும் அற்புத இசைவடிவம் இது.
3) Quo Dharma (தர்மம் எங்கே)?: தொன்று தொட்டு வரும் பழமைக்கும், மாறிவரும் நாகரிகத்துக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் கேள்வி பதில்களாக இசை வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கும் புதுமையான இசைக்கோலம் இது.
4) Spring-O-Spring (வசந்தமே வருக): இளவேனில் காலத்தின் வருகையின் அறிவிப்பாக மலர்கள் மலர்வது, நீர் அருவிகளின் சலசலப்பு போன்ற இன்ப உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இசை வடிவம் இது. மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த கலையான விசில் ஓசை கிளர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. Key Shift என்னும் கிரக பேத உத்தியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
5) Eve of Kurukshetra (குருட்சேத்திரப் போர் துவங்கு முன்): மகாபாரதப் போர் நிகழ்ந்த குருட்சேத்திரப் போர்க்க்களத்தின் இசை வர்ணனை. ரத, கஜ, துரக, பதாதிகள் என்று கூறப்படும் ஆள், பரி, கரி, தேர் என்னும் நால்வகைப் படைகள் எழுப்பும் ஓசைகள் - யானையின் பிளிறல், குதிரைக் குளம்புகளின் நடை ஓசை, வீரர்களின் அறைகூவல்கள், வாட்களின் வீச்சு, உரசல் ஆகியவற்றின் ஒலிகள் இசையோடு ஒன்றி ஒலிக்கின்றன. பாரம்பரிய ராகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசை இது.
6) East-West Wedding (கிழக்கும் மேற்கும் சங்கமமாகும் திருமண விழா): வேத ஒலி, நாத இசை இவற்றுடன் இணைந்து ஒலிக்கும் ரேவதி ராகம். தவில், டிரம்ஸ் போன்ற வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு உண்டு. இந்த ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் வெவ்வேறு இசை வடிவங்களில் வாசித்த அனைத்து இசைக் கலைஞர்களும் இதில் பங்கேற்றிருப்பது ஒரு சிறப்பு.
7) Train Music (ரயில் பயணம்): ஒரு புகைவண்டி ஒரு நிலையத்திலிருந்து அடுத்த நிலையத்துக்குச் செல்லும் பயணத்தின் இசை வடிவம் இது. ரயிலின் ஓட்டம், காப்பி, தேநீர், பலகார விற்பனைக் கூவல்கள், நீராவிக் கொப்பளிப்புடன் கிளம்பும் ரயில் வண்டி மெல்ல மெல்ல வேகம் எடுத்து, உச்ச வேகத்தை எட்டுவது, அடுத்த ரயில் நிலையம் வரும்போது வேகம் குறைந்து நிற்பது போன்ற பல்வகையான ஒலி வடிவங்கள் இசை வண்ணங்களாகப் பரிமாணித்திருக்கும் அதிசயம்! டிரம்கள் போன்ற தாள இசைக் கருவிகளின் நிரவல்களுடன், ரயில் பயண நிகழ்ச்சிகள், சிறுவர்களின் விளையாட்டு போன்றவையும் இணைந்து கிளர்ச்சியூட்டும் இசை இது.
8) Holiday Mood (விடுமுறை வேட்கை): வாரம் முழுவதும் உழைத்தபின், வார இறுதியில் விடுமுறையை எதிர்நோக்கும் இளைஞர்களின் மனநிலையைச் சித்தரிக்கும் இசை. கிடார்கள், விசில் ஓசை போன்றவை அதிகம் விரவியிருக்கும் இசைக் கோலம் இது.
9) Raasa Leela (ராஸ லீலை): மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் பணியாற்றிய மூத்த இசைக்கலைஞர்கள் நஞ்சப்பா, சஞ்சீவி ஆகிய இருவரின் புல்லாங்குழலில் கோபியரை மயக்கிய கண்ணனின் குழலோசையை நாம் கேட்டு மயங்கலாம். மனதை மகிழ்விக்கும் நாகஸ்வராளி ராகம். கண்ணன் மறையும்போது, அவன் பிரிவைத் தாங்க முடியாத கோபியர்களின் நடனத்தின் லய வின்யாசம், பிரிவைச் சித்தரிக்கும் கோபிகா திலக ராகப் பின்னணியில்.
10) Melody Medley: (இனிய ராகங்களின் கலவை): நாகஸ்வராளி, சாமா, மோகனம் ஆகிய மூன்று ராகங்களின் மூர்ச்சனை சங்கதிகள் கேள்வி பதிலாய் ஒலிக்கின்றன. வயலின், வீணை, சாக்ஸஃபோன், கிடார், டிரம்பெட், டிரம்ஸ் என்று பல வாத்தியக் கருவிகள் இணைந்தும், தனித்தும் ஒலிக்கும் அழகு!
11) Percussions Sangamam: தாள இசைக்கருவிகளின் சங்கமம்: கேரளத்தின் பஞ்ச வாத்தியம், தென்னிந்திய இசைக் கருவிகளான மிருதங்கம், கடம், கஞ்சிரா, வட இந்திய இசைக் கருவிகளான தபலா, டோலக் போன்ற பல தாள வாத்தியக் கருவிக்ள் இணைந்து ஒலிக்கும் இந்த இசை வடிவம், 'தா' என்ற எழுத்தால் குறிப்பிடப்படும் சிவதாண்டவத்தையும், 'ல' என்ற எழுத்தால் குறிக்கப்படும் உமையின் நடனத்தையும் உள்ளடக்கிய 'தால' என்ற தாளத் தத்துவத்தின் பொருளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.
இசை என்ற இரண்டெழுத்துத் தத்துவத்தின் software ஆக விளங்கியவர் மூன்றெழுத்துப் பெயர் கொண்ட MSV என்றால் hardware ஆக விளங்கியது HMV என்ற மூன்றெழுத்தால் அறியப்பட்ட இசை வெளியீட்டு நிறுவனம். எம் எஸ் வி உருவாக்கிய இசை அற்புதங்களை இசைத்தட்டுக்களில் பதித்து நாம் கேட்க வகை செய்தவர்கள் HMV நிறுவனத்தினர்.
அன்றைய கால கட்டத்தில் வானொலிப்பெட்டியே சில வீடுகளில்தான் இருந்தது. இசைத்தட்டுக்களைப் போட்டுக் கேட்கத் தேவையான 2கிராம்போன் சாதனம் வைத்திருந்தோர் மிகச் சிலரே. திரைப்படப் பாடல்களைப் போல் இந்த ஆல்பம் வானொலியில் ஒலிபரப்பப் படாததால், Thrilling Thematic Tunes என்ற இந்த இசை அமுதை, தேவர்கள் மட்டுமே அமுதம் அருந்த முடிந்ததுபோல், ஒருசிலரால் மட்டுமே பருக முடிந்தது.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், சிலிர்க்க வைக்கும் இசைக்கோலங்கள் என்ற இந்த இசை அமுதை எல்லோரும் பருகி இன்புறும் வகையில் இன்று சரிகம நிறுவனம் இதைக் குறுந்தகடு வடிவில் வெளியிட முன்வந்துள்ளது. இது நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு, ஏன் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.