புதன், 5 ஜனவரி, 2011

15. காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே?- ஒரு அலசல்

படம்: பாக்யலக்ஷ்மி
எழுதியவர்: கண்ணதாசன் (வேறு யாராக இருக்க முடியும்?)
இசை: மெல்லிசை மன்னர்கள் (வேறு யாராக இருக்க முடியும்?)

பாக்யலக்ஷ்மி படத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோருமே முதலில் குறிப்பிடுவது 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடலைத்தான். நானும் மாலைப்பொழுதின் மயக்கத்தில் விழுபவன் தான் என்றாலும், என்னை அதிகம் மயக்குவது 'காண வந்த காட்சிதான்.' நான் இப்படிச் சொல்வதற்காக என் ரசனையை யாரேனும் குறை கூறினாலும் பரவாயில்லை!

ஆஹா! என்ன ஒரு காட்சியைப் படைத்திருக்கிறார்கள், கவிஞரும் மெல்லிசை மன்னர்களும்! கம்ப சித்திரம் போல் அல்லவா ஜொலிக்கிறது இவர்கள் தீட்டியுள்ள இசைச்சித்திரம்!

தன் தோழியின் விட்டில் தஞ்சம் புகுந்து அவளை அண்டி வாழும் ஒரு இளம் விதவை, ஒரு நாள் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட தன் இளவயதுக் கணவனைக் காண்கிறாள். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைத் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து ஓடி வருகிறாள். ஆனால் அவள் கண்ட காட்சி என்ன? இவள் கணவன், தோழியின் காதலனாக நிலவொளியில் அமர்ந்திருக்கிறான்!

இந்த அதிர்ச்சியையே தாங்க முடியாத நிலையில், தோழியின் பாடல் இவள் புண்பட்ட மனதைக் கோல் கொண்டு குத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே


பல நாள் பட்டினி கிடந்த ஒருவன் ஓரிடத்தில் அறுசுவை உணவு படைத்திருப்பதைக் கண்டு தனக்குத்தான் அது படைக்கப் பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் ஓடி வர, அவன் உயிர் நண்பன் அந்த உணவுத்தட்டை எடுத்துக்கொண்டதுடன் இல்லாமல், இவன் பட்டினியாய் இருப்பதையும் அறியாமல், மரத்தில் இருக்கும் காக்கையைப் பார்த்து, இது உனக்கு என்று நினைத்தாயா என்று கேலி பேசுவதைக் கேட்கும் நிலை எவ்வளவு சங்கடமானது!

நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
உன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரைக் காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ



தோழி பாடுவது என்னவோ நிலவைப் பார்த்துத்தான். ஆனால் பாடல் வரிகள் இவளை அல்லவா தாக்குகின்றன! தன் காதலைப் பார்த்து நிலவு அதிர்ச்சி அடைந்து நின்று விட்டதாகத் தோழி பாடுகிறாள். (நாம் ஓடும்போது நம்முடன் ஓடி வரும் நிலவு, நாம் நின்றால் தானும் நின்று விடும். அவ்வாறு நின்ற நிலவைத்தான் சீண்டும் விதமாகப் பாடுகிறாள் இவள் தோழி.)

பாடலின் ஒவ்வொரு வரியும் இவளுக்கும் பொருந்துகிறது, நிலவுக்கும் பொருந்துகிறது. வெள்ளை உடை அணிந்த இந்த இளம்விதவையும் ஒரு வெள்ளி நிலவுதானே!

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி நெஞ்சம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் மோக நிலை மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே



முதல் சரணம் இவளைக் கேலி செய்வது போல் அமைந்திருக்கிறது என்றால் இரண்டாவது சரணம் சாட்டை அடியாக வந்து விழுகிறது.
காதல் எனக்குத்தான் உரியது, உனக்கு இல்லை. (ஏனெனில் நீ ஒரு விதவை.) உன் மோக நிலயை மறந்து விடு.

'மேகத்திலே மறைந்து விடு' என்பதற்கு, இனி உன் வாழ்வில் இருள் தான் என்று பொருள் கொள்ளலாம். விதவைகள் வெளியே வராமல் வீட்டுக்குள் மறைவாக இருக்க வேண்டும் என்ற நியதிக்கேற்ப நீயும் உள்ளே போய் ஒடுங்கிக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இசை பற்றிய நுண்ணறிவு எனக்கு இல்லை என்றாலும், நான் உணர்ந்து அனுபவித்த சில விஷயங்கள்:

ஒரு தோழி காதலின் களிப்பில், மற்றொருத்தி ஏமாற்றத்தின் எல்லையில். இருவர் மன நிலையும் இசையில் பிரதிபலிக்கிறது. பல்லவியில் உற்சாகம், தொடர்ந்து வரும் இணைப்பிசையில், முதலில் வரும் குழல் இசையில் ஏக்கம், பின்பு சித்தாரில் (என்று நினைக்கிறேன்) ஒரு துள்ளல், பிரகு சரணத்திலும் உற்சாகம், தொடரும் ஹம்மிங்கில் பச்சாதாபம் என்று உணர்ச்சிகளை பொம்மலாட்டக் கயிறு கொண்டு இயக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர். (மெல்லிசை மன்னர் என்றாலே பன்மைதான், மன்னர்கள் என்று சொல்ல வேன்டியதில்லை, ஆயினும் இவர்கள் பாடல்களைக் கேட்டால் 'கள்' குடித்தது போல் போதை ஏற்படுவதால், மன்னர்'கள்' என்று சொல்கிறோம் என்று வாலி ஒருமுறை கூறினார்!)

'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' என்பதுபோல், ஒருவர் சிரிக்க, மற்றவர் தவிக்க, இருவர் உணர்ச்சிகளையும் ஒரே பாடலில் காட்டியிருப்பது மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த கலை.

'மாலைப்பொழுதின் மயக்கத்தில்' ஒரு பெண்ணின் துயரம் நேரடியாக வெளிப்பட்டு நம்மை உருக வைக்கிறது. 'காண வந்த காட்சியில்', உற்சாகத்துகுப் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் துயரம் நம் மனதைப் பிசைகிறது.

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், இதன் இசை இன்பத்தை அளித்தாலும், பாடலின் உள்ளிருக்கும் சோகம் எனக்குள் புகுந்து கொண்டு என்னைச் சற்று நேரம் கலங்க வைக்கிறது.

உடனே பாடலைக் கேட்க வேன்டும் என்று தோன்றுகிறதா? இதோ உங்களுகாகக் காத்கிருக்கிறது மெல்லிசை மன்னரின் விருந்து! 

  http://www.raaga.com/player4/?id=26728&mode=100&rand=0.6369598480590672

காண வந்த காட்சி என்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக