வியாழன், 11 ஆகஸ்ட், 2016

30. இதுதான் BGM!

'கற்பகம்' படத்தில் ஒரு காட்சி. ஜெமினிக்கு சாவித்திரியுடன் இரண்டாவது திருமணம் நடக்கிறது.

ஜெமினியும் அவரது முதல் மனைவி K.R. விஜயாவும் தங்கள் சொந்தக் குழந்தை போல் வளர்த்த அவரது மைத்துனர் முத்துராமனின் குழந்தை, மணமகன் ஜெமினிக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறது. 

ஜெமினியின் பக்கத்தில் மணமகள் அமர வேண்டும் என்பதற்காகக் குழந்தையின் தாத்தாவும், ஜெமினியின் மாமனாருமான S.V. ரங்காராவ் குழந்தையை எழுந்து வரச் சொல்கிறார்..

குழந்தை எழுந்து வர மறுத்ததால், ரங்காராவ் வலுக்கட்டாயமாகக் குழந்தையைத் தூக்கி வேறு இடத்தில் உட்கார வைக்கிறார். குழந்தையின் முகத்திலும், ஜெமினியின் முகத்திலும் சோகம். இதுதான் காட்சி. இதற்கு எப்படிப் பின்னணி இசை அமைத்திருக்கிறார் எம் எஸ் வி (விசுவநாதன்-ராமமூர்த்தி) என்பதைப் பார்க்கலாம்.

ஜெமினியும் பக்கத்தில் குழந்தையும் உட்கார்ந்திருக்கும்போது நாதஸ்வரத்தில் 'அலைபாயுதே' ஒலிக்கிறது. வேறு இசைக்கருவிகள் எவையும் பயன்படுத்தப்படவில்லை. 

ரங்காராவ் குழந்தையிடம் பேசுகிறார். இப்போது  நாதஸ்வர ஒலி சற்றுத் தணிந்து ஒலிக்கிறது. குழந்தை எழுந்திருக்க மறுத்ததால், ரங்காராவ் வலுக்கட்டாயமாகக் குழந்தையை அப்புறப்படுத்துகிறார். இப்போது வசனம் இல்லை. அதனால் பின்னணி இசையான நாதஸ்வரத்தின்  volume அதிகரிக்கிறது. 

இந்த இடத்தில்தான் மெல்லிசை மன்னர் தனது மேஜிக்கை அரங்கேற்றியிருக்கிறார்.

இசை அமைப்பாளருக்கு இங்கே இரண்டு சவால்கள். ஒன்று குழந்தையின் சோகத்தைக் காட்டும் விதத்தில் பின்னணி இசை அமைய வேண்டும். ஆனால் திருமணக்காட்சியில் சோக இசை ஒலித்தால் பொருத்தமாக இருக்காது.

இரண்டாவது, நாதஸ்வரக்கலைஞர் கானடா  ராகத்தில் ஒரு பாடலை வாசித்துக் கொண்டிருக்கிறார். சில வினாடிகளுக்குள் அவர் வேறொரு ரகத்தை வசிப்பதாகக் காட்ட முடியாது. 

இரண்டு சவால்களையும் ஒருங்கே சமாளித்து அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் எம் எஸ் வி. எப்படி?

நாதஸ்வரத்தின் volume அதிகரிக்கும்போது அதே கானடா ரகம்தான் ஒலிக்கிறது. முன்பு ஒலித்த பாடலின் தொடர்ச்சியாகத்தான் ஒலிக்கிறது. ஆனால் இப்போது நாதஸ்வரத்தில் வருவது 'ஏ ஏ ஏ...' என்ற ஆலாபனை. கானடா ரக ஆலாபனைதான். கானடா ராகத்தில் அமைந்த 'முல்லை மலர் மேலே' பாடலில் 'மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே' என்ற வரிக்குப் பின்னால் இதே போன்ற ஆலாபனை வருவதைக் கேட்கலாம். அந்தப் பாடலில் இந்த ஆலாபனை ஆனந்தமான தொனியில் ஒலிக்கும். ஆனால் இங்கே அது தனியாக ஒலிக்கும்போது, அதில் சோகமான தொனி ஒலிப்பதைக் கவனிக்கலாம்.

முதலில் ஆனந்தமாக ஒலித்த அதே பாடலின் தொடர்ச்சியாக ஆனால் சோகமாக ஒலிக்கும் வண்ணம் இந்த ஆலாபனையைச் சேர்த்திருப்பது வியக்க வைக்கிறது.

குழந்தைகள் காப்பகத்தில் பல குழந்தைகளும் சேர்ந்து அலறுவது போல் பல வயலின்களை மொத்தமாக அலற விடுவதையெல்லாம் 'ஆஹா இதுவல்லவோ பின்னணி இசை' என்று விழுந்து விழுந்து பாராட்டும் மேதாவி விமரிசகர்களும், ரசிக ஞானிகளும் இது போன்ற அற்புதமான பின்னணி இசையின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் 0;30 முதல் 1:30 வரை மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மாஜிக்கைக் கண்டும் கேட்டும் ரசிக்கலாம்.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

29. மெல்லிசை மன்னர் - ஒரு ரசிகரின் பார்வையில்


இதுதான் திரு ராம் N ராமகிருஷ்ணன் இன்று (21/02/2016) மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி விவேகனந்தர் அரங்கில் வழங்கிய நிகழ்ச்சியின் தலைப்பு. (ராம் அவர்கள் பேசியது ஆங்கிலத்தில். நான் அறிந்த வரையில் அவர் பேச்சின் முக்கியப் பகுதிகளைத் தமிழில் கொடுக்க முயல்கிறேன்.)

எம் எஸ்.வி. முதலில் ஒரு ரசிகர் என்பதை 'என்னைத் தெரியுமா?' பாடலின் சில வரிகளை ஒலிக்கச் செய்வதன் மூலம் அறிவித்துத் தன் உரையைத் துவங்கினர் ராம். (நிகழ்ச்சியில் போடப்பட்ட எல்லாப் பாடல்களுமே ஒலி வடிவில்தான் வழங்கப்பட்டன.)

"உங்கள் ஆர்மோனியத்தில் விரல்களை வைத்து உங்கள் இசை அமைப்பைத் துவங்கும்போது  என்ன நினைப்பீர்கள்?'  என்று ராம் கேட்டதற்கு "நான் இசை அமைக்கும் பாடல் ஒரு பாமர ரசிகனையும் சென்றடைய வேண்டும் என்று நினைப்பேன்!" என்று பதில் சொன்னாராம் எம்.எஸ்.வி..

தொடர்ந்து ராம் சொன்ன விஷயங்கள் இவை.

மெல்லிசையைத்  தமிழ்த் திரை உலகுக்கு வழங்கிய  எம்.எஸ்.வி. மெல்லிசை (நல்லிசை) எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவரது (கவிஞர் இயற்றிய)  பாடலிலேயே சொல்லி இருக்கிறார்.

கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத் தாளம் போடலாம்
பாட்டினிலே பொருள் இருக்கும்
பாவையரின் கதை இருக்கும்.

கேட்டவரெல்லாம் பாடலாம்
மெல்லிசை மன்னரின் பாடல்கள் எல்லாமே இந்த வகைதான். ஒரு முறை தோஹாவில் தம் அலுவலகத்தில் நடந்த கவிதை ஒப்பிக்கும் போட்டியில் அதிகம் படிக்காத தொழிலாளர்கள் 'மயக்கமா கலக்கமா,' 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்,' 'தீர்த்தக்கரையினிலே' ஆகிய திரைப்படப் பாடல்களை அனாயாசமாக ஒப்பித்ததைக் குறிப்பிட்டு, எல்லோரும் பாடும்படி மெல்லிசை மன்னர் இசை அமைத்ததால்தான் இது சாத்தியமாயிற்று என்று குறிப்பிட்டார் ராம்.

பாட்டுக்குத் தாளம் போடலாம்
மெல்லிசை மன்னரின் பல பாடல்களுக்கு ராக, தாள அறிவு இல்லாதவர்கள் கூட எளிமையாகத் தாளம் போடலாம் என்று கூறிய ராம்,
'தென்றல் உறங்கியபோதும்,'  'நீயேதான் எனக்கு மணவாட்டி,'  'வந்த நாள் முதல்' ஆகிய பாடல்களை வாயாலேயே எளிதாகத் தாளம் போட்டுப் பாடிக் காட்டி  வியக்க வைத்தார்.

பாட்டினிலே பொருளிருக்கும்
பாடல் வரிகளையும் இசையையும் ஒருங்கிணைத்து இசை அமைப்பது என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர்தான். (He pioneered the concept of integrating the tune to the lyrics.)

பாவையரின் கதை இருக்கும்
அனேகமாக எல்லாப் பாடல்களுமே பாவையரின் கதையைக் கூறுபவைதானே! மெல்லிசை மன்னரின் சில பாடல்களை வைத்து வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய கதையைக் கூறினார் ராம்.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். 'என்ன பார்வை உந்தன் பார்வை' என்று பாடுகிறான்.

அவள் யார் என்று அறிய விரும்புகிறான். 'யார் அந்த நிலவு?'

தன் பெற்றோரிடம் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்' என்கிறான். திருமணம் நடக்கிறது.

முதல் இரவில் 'பொன் என்பேன், சிறு பூவென்பேன்!'

சிறிது காலத்துக்குப் பிறகு கணவன் மனைவிக்கிடையே  சண்டை வருகிறது. 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?'

வருடங்கள் ஓட இருவருக்கும் வயதாகிறது. 'ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!'

முதுமையில் 'பொன்னை விரும்பும் பூமியிலே  என்னை விரும்பும் ஓருயிரே!' என்று பாடத் தோன்றும்.

இவ்வாறு வாழ்க்கை நடந்தால் 'முகமும் மலரும், மனமும் குளிரும்.'

மெல்லிசை மன்னரின் இசைக்குழுவைப் பற்றிக் குறிப்பிட்ட ராம், இசைக்குழுவினரின் திறமைக்குச் சவால் விடும் வகையில்  மெல்லிசை மன்னர் இசை அமைத்ததால்தான்  அவர்கள் அவரிடம் பல வருடங்கள் பணியாற்றினார் என்று குறிப்பிட்டார்.

மெல்லிசை மன்னர் ஒவ்வொரு பாடலுக்கும் பல டியூன்களைப் போட்டதையும், அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட டியூன்களைத் தவிர மற்றவற்றை  நாம் இழந்து விட்டதையும் குறிப்பிட்ட ராம், பதிவு செய்யப்பட பாடல்களில் கூட சில பாடல்கள்  படங்களில் இடம் பெறாமல் போய் விட்டதையும் குறிப்பிட்டு, 'பாலும் பழமும்' படத்துக்காகப் போடப்பட்ட 'தென்றல் வரும்' பாடலைப் போட்டுக் காட்டினார்.

பியானோ 
கவிஞரும், மெல்லிசை மன்னரும் ரஷ்யாவுக்குச் சென்றபோது செக்காஸ்கியின் பியானோவில், செக்காஸ்கி அமைத்த இசையை அவரது இசைக் குறிப்புகளைப் பார்க்காமலேயே அரை மணி நேரம் வாசித்து ரஷ்ய இசை ரசிகர்களை மெல்லிசை மன்னர் அயர வைத்த சம்பவத்தைக் கவிஞர் விவரித்த ஒலிப்பதிவைப் போட்டுக்காட்டி மெல்லிசை மன்னரின் பியானோ பயன்பாடு பற்றிய விளக்கத்தைத் துவக்கினார் ராம்.

1. மெல்லிசை மன்னர் பியானோவை இடைவெளி இன்றித் தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார். (non-stop continuous progression.)
2. மெல்லிசை மன்னர் பியானோவை இந்திய மயமாக்கி இருக்கிறார்.

பியானோ சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டதற்கு எடுத்துக்காட்டாகக்  குறிப்பிட்டு ராம் ஒலிபரப்பிய பாடல்கள்

1. என்ன என்ன வார்த்தைகளோ? (இந்தப் பாடலைப் பற்றிப் பேசும்போது எம் எஸ் வி  'இதில் பியானோ பாடியிருக்கிறதே, கேட்டீர்களா?' என்றாராம்!)
2. பார்த்த ஞாபகம் இல்லையோ?
3. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் (இந்தப் பாடலில் துவக்கம் முதல் இறுதி வரை பியானோ ஒலித்திருக்கிறது.)
4. வண்ணக்கிளி சொன்ன மொழி
5. கால் இரண்டும் பின்னப் பின்ன
5. பாட்டொன்று கேட்டேன் (நாட்டுப்புறப் பாடல் போல் மெட்டமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலில் பியானோ ஒலிப்பது மேற்கத்திய இசையில்! இந்தப் பாடலுக்கு எம் எஸ் வியே பியானோ வாசித்திருக்கிறார்.)
6. பாடுவோர் பாடினால் (பியானோ கலைஞர் ஒருவர் பாடுவதாக அமைந்த பாடல் என்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கிறது.)

ஜாஸ் 
இது அமரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது. தடைகளை உடைத்தெறிந்த இசை வடிவம் என்று கருதப்படும் ஜாஸுக்கு வடிவம் (structure) கிடையாது. பியானோ, சாக்ஸபோன், டிரம்ஸ் போன்ற கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும்.

மெல்லிசை  மன்னர் ஜாஸைத் தனது பல பாடல்களில் மிக இயல்பாகக் கையாண்டிருக்கிறார். ராம் குறிப்பிட்டுச் சொல்லி இசைத்த ஜாஸ் பாடல்கள்:
1. வர வேண்டும் ஒரு பொழுது
2. என்ன வேகம் நில்லு பாமா
3. மாடி மேலே மாடி கட்டி

வால்ட்ஸ்
ஆண்  பெண் ஜோடியாக ஆடும் நடன இசை வால்ட்ஸ். இந்த வகை மேற்கத்திய நடனங்களில், ஊஞ்சல் ஆடுவது போல் இலேசான ஏற்ற இறக்கங்கள் உண்டு என்பதை எம் எஸ் வியின் வால்ட்ஸ் இசையில் அமைந்த பாடல்கள் அற்புதமாக எடுத்துக்காட்டும். குளோஸ்-அப் மற்றும் ஸ்லோ மோஷன் காட்சிகள் உள்ள பாடல்களை  ஜாஸ் இசையில் அமைத்திருப்பார் எம் எஸ் வி.
1. அத்தான் என் அத்தான்
2. பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
3. நாளை இந்த வேளை
4. யாரது யாரது தங்கமா
5. கல்யாண நாள் பார்க்கச் சொல்லாமா
6. என்னைத் தொட்டு சென்றன கண்கள்
7. கண் போன போக்கிலே

தாளம் .
பாங்கோஸ் என்ற தாளக் கருவியை  எந்த மொழியிலும் வேறு எந்த இசை அமைப்பாளரும் பயன்படுத்தாத அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் மெல்லிசை மன்னர் . நீண்ட நேரம் ஒலித்தால் சலிப்பூட்டும் வகையான ஒலியைக் கொண்டதாகக் கருதப்படும் பாங்கோஸை  வைத்துப் பல அற்புதங்கள் செய்திருக்கிறார் எம். எஸ் வி. எம். எஸ் வியின் பாங்கோஸ் பயன்பாட்டின் மூன்று  சிறப்பம்சங்கள்:

1. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று எல்லா வித இசைகளுக்கும் பாங்கோஸைப் பயன்படுத்தியது.
2. பாடலின் துவக்கத்தில் பாங்கோஸைப் பயன்படுத்தியது.
3. அதன் தொனியை (டோன்) இனிமையாக மாற்றியது. இதை அவர் எப்படிச் செய்தார் என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறிய ராம், தோஹாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது பாங்கோஸின் தொனி  எம் எஸ் விக்குத்  திருப்தி அளிக்காததால், டிரம்மை அடிக்கும் கோலை பாங்கோஸில் அடித்து ஒழி எழுப்பியதை தாம் நேரில் பார்த்து ரசித்து வியந்ததைப் பகிர்ந்து கொண்டார்.

பாங்கோஸ் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்ட பாடல்கள்
1. அடடா என்ன அழகு
2. அவளுக்கென்ன
3. ஒரு பெண்ணைப் பார்த்து
4. பார்த்த ஞாபகம் இல்லையோ

இயற்கைக் காட்சிகள், கதாநாயகன் அறிமுகம் போன்றவற்றுக்கு   பாங்கோஸை  அதிகம் பயன் படுத்தி இருக்கிறார் எம் எஸ் வி.
உதாரணங்கள்:
1. புதிய வானம் புதிய பூமி
2. கண்களுக்கென்ன காவல் இல்லையோ
3. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
4. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
5. பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

மௌனம், சோகம், தனிமை ஆகிய சூழல்களுக்கும் பாங்கோஸைப் பயன்படுத்தி இருக்கிறார்.
உதாரணங்கள்:
1. போனால் போகட்டும் போடா
2. பாலும் பழமும் கைகளில் ஏந்தி
3. அவள் பறந்து போனாளே
4. எங்கிருந்தாலும் வாழ்க
5. எங்கே நிம்மதி
'எங்கே நிம்மதி'யில் பயன்படுத்தப்பட்ட நுற்றுக்கு மேற்பட்ட இசைக்கருவிகள் அனைத்தையும் ஒரே தாளவாத்தியக் கருவியாக இருந்து ஒருங்கிணைத்தது பாங்கோஸ்தான் என்ற வியக்க வைக்கும் செய்தியையும் ராம் பகிர்ந்து கொண்டார்.

விசில் 
மெல்லிசை மன்னர் பயன் படுத்திய அளவுக்கு விசிலை வேறு எந்த இசை அமைப்பாளரும் பயன்படுத்தவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். விசில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றையும்  அவற்றின் சூழலையும்  குறிப்பிட்டார் ராம்.

1. வந்த நாள் முதல்  (தனிமை)
2, நீரோடும் வைகையிலே (தாலாட்டு)
3. ஆண்டவன் படைச்சான் (உல்லாசம்)
4. ஆண்டொன்று போனால் (காதல்)
5. நெஞ்சிருக்கும் வரை (சுய உற்சாகம் - lifting up)
6. நெஞ்சத்திலே நீ (காதல் டூயட்)
7. கண்டதைச் சொல்லுகிறேன் (தத்துவம்)

பாடல் துவக்கம்  ஹம்மிங்குடன் (voice based introduction)
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போல் வெவ்வேறு தளங்களில் இருக்கும் ஹம்மிங், பல்லவி இரண்டையும் அற்புதமாக அனாயாசமாக இணைப்பது எம் எஸ் வியின் தனிச் சிறப்பு.

1. நெஞ்சம் மறப்பதில்லை
2. பவளக்கொடியிலே
3. கல்லெல்லாம்
4. தங்க ரதம் வந்தது
5. ஏழு ஸ்வரங்களில்
6. பூ மாலையில்
7. யார் யார் யார் இவர் யாரோ
8. ஆதிமனிதன் காதலுக்குப்பின்
9. மயங்குகிறாள் ஒரு மாது
10. காற்றுக்கென்ன வேலி
11. நினைத்தாலே இனிக்கும்

'நெஞ்சம் மறப்பதில்லை' முதல் 'நினைத்தாலே இனிக்கும்' வரை எம் எஸ் வி கொடுத்திருக்கும் இத்தனை விதவிதமான பாடல் துவக்கங்களை நெஞ்சம் மறக்குமா, இவற்றை நினைத்தால் இனிக்காமல் இருக்குமா என்ற கேள்வியுடன் தனது உரையை முடித்தார் ராம்.

'பழகி வந்த புதிய சுகம் பாதியிலே முடிந்தாலும், எழுதி வைத்த ஓவியம் போல் இருக்கின்றாய் இதயத்தில் நீ' என்று மெல்லிசை மன்னரின் பாடலாலேயே அவருக்கு அஞ்சலி செய்து தனது அற்புதமான presentationஐ  நிறைவு செய்தார் ராம்.

'என்னைத் தெரியுமா? நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா?' என்று  மெல்லிசை மன்னருக்கு அறிமுகமாக ராம் அளித்த பாடல் ராமுக்கும் ஒரு பொருத்தமான அறிமுகமாக அமைந்து விட்டது. ஒரு நல்ல ரசிகன்தான், தான் ரசித்தவற்றை மற்ற ரசிகர்களுடன் உற்சாகத்துடனும் மன நிறைவுடனும் பகிர்ந்து கொள்ள முடியும். ராமைப் போன்ற நல்ல ரசிகர்களைப் பெற்ற வகையில் மெல்லிசை மன்னர் கொடுத்து வைத்தவர்தான்!

.