வெள்ளி, 8 ஜூன், 2018

42 முதலிரவில் சுய முன்னேற்ற வகுப்பு!

இரண்டு பெண்கள் தங்கள் முதலிரவில் கணவனுக்கு சுயமுன்னேற்ற வகுப்பு எடுதந்திருக்கிறார்கள் (திரைப்படத்தில்தான்)!

ஒருத்தி கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவள். அனாதையாக வளர்ந்தவள். அவள் கணவன் விபத்தில் ஒரு கை ஊனமடைந்தவன் தன் அன்னை அவளுக்கு அடைக்கலம் கொடுத்தாள் என்ற நன்றிக்காகவே தன்னை அவள் திருமணம் செய்து  கொண்டாளோ என்று நினைக்கும் அவள் கணவன் கை ஊனமான தான் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியுமா என்று நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது  அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அவள் பாடுகிறாள்.

படிக்காத கிராமத்துப் பெண் என்பதால் எளிய உதாரணங்களைச் சொல்லி அவனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்.

பல்லவி
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

'உன் மீது பரிதாபப்பட்டு நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. நீ தங்கமானவன் (உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவன்) என்பதால்தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்' என்பதை அவனைத் தங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் வெளிப்படுத்துகிறாள்.

உன் உடல் ஊனம் நீ என் மீது அன்பு செலுத்தத் தடையாக இருக்கப் போவதில்லையே!  (உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உன் அன்பு ஒன்றைத்தான் என்பதைத் தெளிவு படுத்துகிறாள்.)

சரணம் 1
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?

சிங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவனுடைய வீரத்தையும், பலத்தையும் அவனுக்கு நினைவு படுத்துகிறாள்.  சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் சொல்வது போல் எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் செயல்களும் சிறப்பாக இருக்கும் என்ற செய்தியையும் சொல்கிறாள்.

சரணம் 2
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா?
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?

இது முதல் இரவு என்பதை அவனுக்கு நினைவூட்டும் வகையில் இந்த வரிகள் அமைந்திருக்கின்றன. உடல் ஊனம் காதலுக்குத் தடையாக இருக்காது என்பதை உணர்த்துகிறாள்.

சரணம் 3
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்
உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்.

எல்லாம் சரிதான். ஆனால் காலம் (விதி) நமக்குச் சாதகமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? அப்படி நேர்ந்தால், ஒரு மனைவியாக உனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டு ஒரு நல்ல மனைவியாக இருப்பேன். எந்த நிலையிலும் மானத்தோடு வாழ்ந்து ஒரு நல்ல குலப் பெண்மணியாக வாழ்வேன்.

இங்கே பண்பாட்டுப்படி வாழும் ஒரு மனைவியாகப் பேசுகிறாள்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், முதல் இரண்டு சரணங்களில் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவள், மூன்றாவது சரணத்தி ல் தான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறாள்.

பாடலின் சுருக்கம் இது:

பல்லவி: நீ தங்கமானவன் அல்லவா!

சரணம் 1: நீ ஒரு பலம் பொருந்திய ஆண்மகன்

சரணம் 2: ஒரு காதலனாக (கணவனாக) நடந்து கொள்

சரணம் 3: ஒரு மனைவியின் கடமை எது என்பதை நான் அறிவேன். அதை நிறைவேறுவேன்.

எத்தனை அழகாக, பொருத்தமாக பாடலை அமைத்திருக்கிறார் கவிஞர்!

1959ஆம் ஆண்டு பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'பாகப் பிரிவினை ' படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

பாடல் வரிகளின் எளிமைக்கு ஏற்ப இசையும் எளிமையாக அமைந்திருக்கிறது. எளிமை என்றால் அலங்காரங்கள் அதிகம் இல்லாத, இனிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மிகக் குறைந்த இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அமைக்கப்பட்ட  மென்மையான இசை. அடக்கமான பட்டிக்காட்டுப் பெண்ணைப் போல் இசையும் அடக்கமாக வந்து நம்மை ஆட்கொள்கிறது.

சிறுவயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒரு பாடல் இது. 'டிண்ட்டி டிண்ட்டின்' என்ற ஆரம்ப இசையைக் கேட்டதுமே மனம் ஒரு அற்புதமான சுக உணர்வை அனுபவிக்கத் தயாராகி விடும்.

பாடல் இதோ:

..
இன்னொரு பெண் ஒரு அரசனை மணந்தவன். அவளும் அரச குலத்தைச் சேர்ந்தவள்தான். அவள் கணவன் ஒரு வீரன். கொடை வள்ளல். ஆயினும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று கருதப்பட்டு அதனால் பல அவமானங்களைச் சந்தித்தவன்.

இந்தப் பெண்ணும் தன் கணவனுக்கு நம்பிக்கையூட்டும் வரிகளைப்  பாடுகிறாள்.

ஆனால் இங்கு கணவன், மனைவி இருவருமே அறிவிலும், கல்வியிலும் சிறந்தவர்கள் என்பதால், இங்கே மனைவியின் 'உரை' சற்று உயர் நிலையில் இருக்கிறது. உதாரணங்கள், தத்துவங்கள் எல்லாமே அறிவு சார்ந்தும், ஆழமாகவும் உள்ளன.

பாடல் வரிகளைப் பார்ப்போம்:

பல்லவி 
கண்ணுக்குக் குலமேது, கண்ணா!
கருணைக்கு இனமேது?
விண்ணுக்குள் பிரிவேது, கண்ணா!
விளக்குக்கு இருளேது?

சரணம் 1
பாலினில் இருந்தே நெய் பிறக்கும், கண்ணா!
பரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் - அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?

சரணம் 2
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே!

'தருமத்தின் தாயே கலங்காதே!' என்ற கடைசி வரி சுவாரசியமானது. இதற்குப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
1) கர்ணனை 'தர்மத்தின் தாயே!' என்று விளித்து 'நீ' கலங்காதே' என்று சொல்வதாகப் பொருள் கொள்ளலாம். ('தர்மத்தின் தாய்' கடவுள் போன்றவர் என்பதால், ஆணான கர்ணனை இப்படி விளிப்பதில் தவறில்லை.

2) கர்ணன் சோர்வுற்றிருப்பதைக் கண்டு தர்மத்தின் தாய் (அறக்கடவுள்) கலக்கமுற்றிருக்கிறாள். அதனால் அறக்கடவுளிடம், "தர்மத்தின் தாயே! கர்ணனின் சோர்வை நான் போக்கி விட்டேன். நீ இனிமேல் கலங்க வேண்டாம்" என்று சொல்கிறாள் என்று பொருள் கொள்ளலாம்.

3) தமிழில் தர்மம் செய்வது என்பது கொடையைக் குறிக்கும். எனவே தர்மத்தின் தாய் என்பவள்  'கொடைக்கான கடவுள்' என்று கொண்டால், "கொடையின் கடவுளே! கர்ணன் சோர்வுற்று விட்டதால் அவனுடைய கொடை நின்று விடுமோ என்று நீ கலங்க வேண்டாம். நான் அவனுடைய சோர்வைப் போக்கி விட்டேன். அவன் எப்போதும் போல் தர்மம் செய்து கொண்டுதான் இருப்பான்" என்று சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.

1964ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ணன்' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கும் இசை விஸ்வநாதன்-ராமமூர்த்திதான்.

அரசனின் முதல் இரவு என்பதாலும், கவிஞரின் கம்பீரமான, உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய ஆழமான வரிகளுக்கு ஏற்பவும்,  இசையமைப்பு ராஜகம்பீரத்துடன் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் richness என்று சொல்லலாம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலில் இருந்த எளிமையான அழகுக்கு மாறுபட்ட அலங்காரம் செறிந்த அழகு!

அற்புதமான டியூன், அழுத்தமான சங்கதிகள் (வார்த்தைக்கு வார்த்தை சங்கதி!) காயப்பட்ட மனத்தை வருடிக் கொடுப்பது போன்ற ஹம்மிங், பிரமிக்க வைக்கும் பின்னணி இசை என்று மட்டும்தான் என் போன்ற பாமரனால் இந்தப் பாடலின் இசையை வர்ணிக்க முடியும். எந்த ஒரு இசைக்குழுவாலும் இந்தப் பாடலின் பின்னணி இசையைப் பாதி அளவுக்கு கூட வாசிக்க முடிநித்தில்லை என்பதே இந்தப் பின்னணி இசையின் நுணுக்கமான அமைப்புக்குச் சான்று.

ஆறுதல் சொல்வது போல் அமைந்த பாடல் மெதுவான கதியில் செல்கிறது (slow pace).பின்னணி இசை வேகமான கதியில் துள்ளிக் குதித்து ஓடுகிறது - சோர்வடைந்த மனத்துக்கு உற்சாகமூட்டுவது போல். இது போன்ற வேறுபாடுகள் (contrasts) எம் எஸ் வி பார்த்துப் பார்த்துச் (consciously) செய்கிற விஷயங்கள் என்பது அவரது வேறு சில பாடல்களிலும்   நிரூபணமாகியிருக்கிறது.

பாடல் இதோ:


நன்றி!


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக