ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

31. ஜனகனின் மகளை


இலக்கிய ரசனை, இசை ஆர்வம் இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும், இந்தப் பாடல்  உங்களைக் கட்டிப் போட்டு விடும். இரண்டுமே இருந்து விட்டால், கட்டிலிருந்து நீங்கள் மீள்வது கடினம்தான்!

'ரோஜாவின் ராஜா' ஒரு சராசரிப் படம்தான். அதில் ஒரு காட்சி. கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். திடீரென்று கதாநாயகனுக்கு அம்னீஷியா எனப்படும்  மறதி நோய் வந்து விடுகிறது. தன் காதலியையே மறந்த அவன், அவளைப்  பெண் பார்க்கத்  தன நண்பனை அழைத்து வருகிறான்.

தனக்கு மணமகனாக வர வேண்டிய காதலன் 'மாப்பிள்ளைத் தோழனாக' வருவதைக் கண்டு, காதலி மனம் கலங்கிப் பாடும் காட்சி.

இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன். ஆனால் youtube-இல் உள்ள இந்தப் படத்தின் டைட்டில்களில் 'புரட்சிதாசன்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த டைட்டில் கார்டு, 'தராசு' என்ற படத்துக்கானது என்றும் தவறாக 'ரோஜாவின் ராஜா' படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், எம் எஸ் வி மற்றும் சிவாஜி பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்கும் என் நண்பர் V. ராகவேந்தர் அவர்கள் மூலம் அறிகிறேன்.

காட்சியை இயக்குனர் விவரித்ததும் சீதையின் சுயம்வரம் கவிஞருக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். கன்னி மாடத்திலிருந்து ராமனைப் பார்த்து அவனை மனதில் வரித்து விட்ட சீதை, சுயம்வரத்தில் மற்ற பல இளவரசர்களைப் பார்த்தபோது அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று கவிஞர் நினைத்துப் பார்க்கிறார்.

முதலில் ஒரு அரசன் வில்லை எடுக்கிறான். 'ஐயோ இவன் வில்லை வளைத்து விடக்கூடாதே!' என்று ஜானகி பதைபதைத்திருப்பாளே என்று கவிஞர் நினைத்திருக்கலாம். தன்னைப் பெண் பார்க்க வந்தவனுடன் தனக்குத் திருமணம் நிச்சயம் ஆகி விடப்  போகிறதே என்று ஜானகி என்ற பெயர்  கொண்ட இந்தப் படத்தின் கதாநாயகிக்கு ஏற்படும் பதைபதைப்பும் இதே போன்றதுதானே என்று கருதி

'ஒரு மன்னவன் எவனோ வில்லை எடுத்தான்
ஜானகி கலங்கி விட்டாள்'

என்ற வரிகளைப் பாடலின் முத்தாய்ப்பாக வைக்கிறார்.

மற்றபடி, பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை இராமாயண சீதையின் மனநிலையை விவரிப்பதாகவே கொள்ளலாம். திரைப்படத்தின் கதாநாயகியின் மனநிலையும் இதேதான் என்று பாடலைக் கேட்பவர்கள் எளிதாக உணர்ந்து கொள்வார்கள்.

வரிக்கு வரி ரசிக்கக் கூடிய இந்தப் பாடலின் ஒரு சில வரிகளை மட்டும் குறிப்பிட்டு விட்டு, இசை பற்றிய ஓரிரு கருத்துக்களைக் கூற விழைகிறேன்.

'நாணம் ஒரு புறம்
ஆசை ஒரு புறம்
கவலை மறு புறம்
அவள் நிலைமை திரிபுரம்'

பொதுவாக இரண்டு விஷயங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டால் இருதலைக் கொள்ளி எறும்பு என்று சொல்வார்கள். இங்கே நாணம், ஆசை, கவலை என்ற மூன்று திசைகளில் இழுக்கப்படுவதால், கவிஞர் 'திரிபுரம் (அல்லது 'திரிபுறம்')' என்று சொல்லி இருக்கிறர்.

திரி என்றால் மூன்று என்பது சரிதான். ஆனால் 'இரு புறம்' என்பது போல் 'திரி புறம்' என்று தமிழில் வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கவிஞர் புதிதாக ஒரு வார்த்தைப் பிரயோகத்தைப் கையாண்டிருப்பதாகச் சொல்லலாம்.

 இன்னொரு விதத்தில் பார்த்தால், 'திரிபுரம்' என்பது ஒரு ஊர். திரிபுராசுரனை அழிப்பதற்காக, சிவபெருமான்  திரிபுரத்தை எரித்ததாக ஒரு புராணக் கதை உண்டு.

எல்லாப் புறமும்  தீயால் சூழப்பட்ட திரிபுரம் போல், இந்த நாயகியும் நாணம், ஆசை, கவலை என்ற மூன்று நெருப்புகளால் சூழப்பட்டுத் தவிப்பதால், அவள் நிலைமை திரிபுரம் என்று சொல்லியிருப்பதாகவும் கொள்ளலாம்!

'ஜனகனின் மகளை 'என்ற இரு சொற்களில், 'ஜனகனின்' என்பது மேல் ஸ்வரத்திலும், மகள் என்பது கீழ் ஸ்வரத்திலும் இருப்பதாகவும், இதற்குக்  காரணம் சீதை பூமாதேவியின் மகள் என்பதனால் (பூமி கீழேதான் இருக்கிறது) என்றும் இசைப்புலமை பெற்ற என் நண்பர் N.Y.முரளி ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஒரு சுவாரஸ்யமான  விளக்கம்தான். ஆனால், இதற்கு வேறொரு காரணம் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. பாடலில்  ஜானகி என்றோ, சீதை என்றோ குறிப்பிடாமல் 'ஜனகரின் மகள் ' என்று ஏன் குறிப்பிடுகிறார் கவிஞர்? அவள் ராஜகுமாரி என்பதைச் சுட்டிக் காட்டத்தானே? அதனால்தானே சுயம்வரம்? இந்தப் பாடலின் களமே சுயம்வரம்தானே! எனவேதான், அரசனுக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, மகள் என்ற வார்த்தை 'ஜனகரின்' என்ற வார்த்தையின் ஸ்வரத்துக்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

தொடர்ந்து, 'ராஜாராமன் நினைத்திருந்தான்' என்று வருகிறது. இங்கேயும் ராஜகுமாரன் என்ற பொருள் கொண்ட சொற்பிரயோகம்! 

முதல் முறை பாடும்போது 'ராமன் நினைத்திருந்தான்' என்றும், இரண்டாம் முறை பாடும்போது, 'ராஜாராமன் நினைத்திருந்தான்' என்றும் வருகிறது. கவிஞர் எழுதும்போது, 'ஜனகரின் மகளை மணமகளாக ராஜாராமன் நினைத்திருந்தான்' என்றுதான் எழுதியிருப்பார் என்பது என் யூகம்.

மெல்லிசை மன்னர்தான் இசை அமைக்கும்போது முதல்முறை 'ராமன்' என்று வரும்படியும், இரண்டாம் முறை 'ராஜாராமன்' என்று வரும்படியும் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். ('என்னையெடுத்து' பாடலில் 'போனாண்டி,' 'வருவாண்டி என்று தான் எழுதியதை 'போனவன் போனாண்டி,'  'வந்தாலும் வருவாண்டி' என்று மெல்லிசை மன்னர் அழகாக மாற்றியமைத்ததை வாலி குறிப்பிட்டிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது, எம் எஸ் வி இது போன்ற 'tweaking' இல் கைதேர்ந்தவர் என்பதை அறியலாம்!) இது பாடலுக்கு மெருகூட்டுவதுடன், ஒரு சுவாரஸ்யத்தையும் கொடுத்திருக்கிறது. முதலில் 'ராமன்' என்று சொல்லி விட்டு,  அப்புறம், 'அவன் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல, அவனும் ஒரு ராஜகுமாரன்' என்று சஸ்பென்ஸ் வைத்துச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

அடுத்த வரியைப் பாருங்கள், அதாவது கேளுங்கள். 
'அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார்'
என்ற வரியைப் பாடும்போது, நாயகியின் (சுசீலாவின்) குரலில் ஒரு சோர்வு தெரிவதை கவனிக்கலாம். வேறு சில ராஜகுமாரர்களும் அல்லவா சுயம்வரத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று அலுத்துக் கொள்வது போல் தொனிக்கிறதல்லவா? இது போல், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பார்த்துச் செதுக்குவதுதானே நம் இசைச்சிற்பியின் தனிச் சிறப்பு?

பொதுவாக மகிழ்ச்சி, உல்லாசம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமையும் விசில் இந்தப் பாடலில் ஏன் வந்திருக்கிறது என்று நீண்ட காலம் யோசித்திருக்கிறேன். எனக்குத் தோன்றியது இதுதான்.

முதல் சரணத்தில், விசில் ஒரு undertoneஆக வருகிறது. தான் காதலனுடன் மகிழ்ச்சியாக இருந்த காட்சிகள் கதாநாயகியின் அடிமனதில் ஓடுவதைப்  பிரதிபலிப்பதற்காக இந்த விசில் ஒலியைப் பயன்படுத்திருக்கலாம்.

பிறகு, சிறிது நேரம் வராத விசில், 'நாணம் ஒரு புறம்' என்ற வார்த்தைக்குப் பிறகுதான் வருகிறது. அவள் நிலைமை திரிபுரம் என்று வர்ணிக்கிறார் கவிஞர். அதாவது அவள் மனம் சோர்ந்து, நம்பிக்கை இழந்து கலக்கத்தில் இருக்கிறாள்.

பயத்தைப் போக்கிக் கொள்ளவும் விசில் பயன்படும். இரவில் தனியாக நடந்து போகிறவர்கள் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள விசில் அடிப்பதுண்டு. அது போல் நாயகிக்குக்குத் தென்பூட்ட  விசில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன்! அல்லது, ஒரு காரணமுமில்லாமல் வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகக் கூட, மன்னர் இதைப்  பயன்படுத்தியிருக்கலாம்!

இந்தப் பாடலின் இன்னொரு வடிவம் இருக்கிறது.


இதைக் கேட்ட பிறகுதான், நாயகனுக்கு மறந்தவைகள் நினைவுக்கு வருகின்றன என்பது பாடல் காட்சியிலிருந்து தெரிகிறது. படம் வெளிவந்தபோது பார்த்திருக்கிறேன். கதை சரியாக நினைவில்லை. மிகவும் பொறுமையைச் சோதித்த படம் என்ற நினைவு மட்டும்தான் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக