புதன், 24 ஜூன், 2020

44. மெல்லிசை மன்னர் - ஒரு கவிதாஞ்சலி


திரை இசைக்கு நல்ல காலம் எம் எஸ் வி இசையமைத்த காலம்
இதை உலகுக்கு உணர்த்தவே உதித்தது  இந்த  வலைத்தளம்
வலைத் தள உலகில் பதித்ததோர் தடம்
மெல்லிசை மன்னரின் இசைக்கோலங்கள் என்னும் இத்தளம்

யார் இந்த எம் எஸ் வி?

இசையால் அன்று நம்மை மயக்கிய மன்னர்
இரவு உணவு இல்லாதோருக்கும் இவர் இசைதான் டின்னர்
திரை இசை உலகில் இவர் என்றுமே வின்னர்
இசை அமைக்க வந்த எவருமே இவர் பின்னே ஓடி வரும் ரன்னர்!

தென்னிசை வட இசை மேற்கிசை கிழக்கிசை எல்லாமே
இன்னிசையாய் மாறும் இவர் கைக்குள் வந்தால்
ஆர்மோனியப் பெட்டி என்னும் அற்புதக் கருவி ஒன்றே
ஏர்முனையாய் நின்றுதவும் இவ்விசை உழவருக்கு.

வாத்தியங்கள் வணங்கி நிற்கும் கைகூப்பி இவரை
காத்திருக்கும் இவர் கை தம் மீது படர
சாத்தியமே இல்லாத வியப்பிசை வடிவங்கள்
பாத்தியாய்ப் படரும் இவர் இசைத் தோட்டத்தில்

என்றும் ஒரே நிலவுதான் உலவும் வானத்தில்
என்றும் இவர் புகழ்தான் நிலவும் வையத்தில்
அன்று புதுப் புதுப் பாடல் இவர் வழங்கக் காத்திருந்தோம்
இன்றும் அவை புதிதாய் ஒலிப்பதைப் பார்த்து வியந்தோம்

அமுதம் உண்டோர்க்கு மரணம் இல்லையாம்
அமுதுக்காகப் போரிட்டனர் தேவரும் அசுரர்களும்
அமுதைத் தேடி நாம் அவ்வுலகம் போக வேண்டாம்
அமுதாய் இவர் இசையை நாளும் நாம் பருகும்போது.

நன்றி மறவாத இசை ரசிகர் கூட்டம்
என்றும் இவர் புகழைப் பாடிப் போற்றும்
அன்று நமக்கு இசையை அமுதாய் இவர் வழங்கிய நன்மை
என்றும் இசை பாட இவர் வாழ்வார் உண்மை.

பாட வைத்தார் இவர் நம்மை மெய்ம் மறந்து
ஆட வைத்தார் அனைவரையும் இவர் இசையின் மயக்கத்தில்
தேட வைத்தார் நம்மை இவர் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து
போட வைத்தார் புதிய இசை அகராதிகளை வியந்து.

ஏன் இந்த இணைய தளம்?

பாடலுக்கு இசை அமைப்பார் இவர் கண்ணிமைக்கும் நேரத்தில்
ஆடலுக்கும் அழகு சேர்ப்பார் தம் இசை வண்ணத்தால்
பாடிக் களிக்கவும் இவர் இசையின் பொருள் தேடிக் குவிக்கவும்
கூடியிருக்கிறோம் நாம் இவ்விணைய தளத்தில்.

மெல்லிசை மன்னரை இதயத்தில் வைத்தோம்
நல்லிசையை வைத்தோம் நம் உயிரில்
சொல்ல நினைத்ததை எழுத்தில் வைத்தோம்
நல்ல தமிழிலும் வல்ல ஆங்கிலத்திலும்.

சொல்லாத சொல்லுக்கு விலை இல்லை என்றார் கவிஞர்
பொல்லாத இவ்வுலகில் விலையின்றி இல்லை எதுவும் - பொருள்
இல்லாத மனிதருக்கும் கைகூடும் இசைச் செல்வம்
நல்லோர் எவரும் இணையலாம் தடையின்றி நம் இணைய தளத்தில்.

இணைய தளம் பல உண்டு இவ்வைய வலை உலகில்
இணை ஏதும் உண்டோ நம் இணைய  தளத்துக்கு?
அணையா விளக்காய் ஓளிரும் இவர் இசை ஜ்வாலைக்கு என்றும்
துணையாய் நிற்கும் தூபச் சுடர் நமது தளம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக