சனி, 17 பிப்ரவரி, 2018

37. பொன் ஒன்று கண்டேன்

1962ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் 'படித்தால் மட்டும் போதுமா.'

பாலாஜி, சிவாஜி இருவரில், அண்ணன் பாலாஜி படித்தவர், தம்பி சிவாஜி படிக்காதவர். இருவருக்கும் முறையே படித்த பெண்ணான ராஜசுலோசனா, படிக்காத பெண்ணான சாவித்திரி ஆகிய இருவரையும் மணமுடிக்க அவர்கள் பெற்றோர் உத்தேசித்து, பெண் பார்க்க ஏற்பாடு செய்யம்போது சகோதரர்கள் இருவரும் பெண் பார்க்க வெட்கப்படுவதால்(!), அண்ணனுக்குப் பார்த்த பெண்ணைத் தம்பியும், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனும் பார்ப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

அதுபோல் இருவரும் பெண் பார்த்து விட்டு வந்த பிறகு தாங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி வர்ணித்துப் பாடும் பாடல் இது.

இதற்கிடையே சிவாஜிக்குப் பார்த்த சாவித்திரியினால் கவரப்பட்ட பாலாஜி அவளைத் தானே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு, தன்னைப்  பற்றித் தவறான எண்ணம் ஏற்படும் விதத்தில், தனக்குப் பார்க்கப்பட்ட பெண்ணான ராஜசுலோசனாவின் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்புகிறார்.

பாலாஜி, சிவாஜி இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் அங்கங்கே மறைபொருளாகச் சில விஷயங்களை வைத்து இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர்.

விஸ்வநாதன் ராமாமூர்த்தியின் இசையில் மனதை வருடிக் கொடுப்பது போல் அலாதியான இனிமையுடன் அமைந்திருக்கும் இந்த அற்புதமான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தின் சாயலில் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள். 'ராகத்தின் சாயலில்' என்று நான் சொல்வதற்குக்  காரணம்,  சுப்புடு அவர்கள் கூறியது போல்  எம் எஸ் வியின் பாடல்கள் பெரும்பாலும் அவரது சொந்த ராகத்தில் அமைந்தவை என்பதுதான்!

பாடலில் கவிஞர் வைத்திருக்கும் உட்பொருளையும், எம் எஸ் வியின் நுணுக்கமான இசைச் செதுக்கல்களையும் பார்க்கலாம்.

(பாடலின் சில வரிகளில் மட்டும் - நான் கருத்துத் தெரிவித்திருக்கும் வரிகளில் மட்டும் - பாடியவர் சிவாஜி/பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறேன்.)

பல்லவி
சிவாஜி: பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
(தான் பார்த்தது தனக்கு அண்ணியாக வரப்போகிற பெண் என்பதால், அந்தப் பெண்ணைப் பற்றித் தான் வர்ணிப்பது முறையாகுமா என்ற பொருளில் 'சொல்லலாகுமா?' என்கிறார்.)

பாலாஜி: என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?
(மேலோட்டமாகப் பார்த்தால் 'அவளைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.' என்று பொருள் வரும்.  ஆனால் இதன் உட்பொருள் "நான் ஏன் அவளைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும்? அவளைத்தான் நானே கல்யாணம் செய்து கொள்வது என்று முடிவு செய்து விட்டேனே!')

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
என்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்காரச் சின்னம்
அலை போல மின்னும்
(அலை என்ற சொல் உச்சரிக்கப்படும் விதத்தைக் கேளுங்கள்!)

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
('துள்ளி வரும்' என்ற சொற்களே துள்ளி விழும் அழகை மெல்லிசை மன்னரின் இசையில்தான் காண முடியும்!)

துவண்டு விழும்
கொடி இடையாள்
(சொற்களே துவள்கின்றனவே!)

விண்ணோடு விளையாடும் பெண்
அந்தப்  பெண் அல்லவோ
(விண்ணோடு என்ற வார்த்தையில் மேல் தொனியில் துவங்கும் இசை படிப்படியாகக் கீழே இறங்கி பெண் அல்லவோ என்ற இடத்தில் கீழே வந்து விடுகிறது! விண்ணையும், மண்ணில் இருக்கும் பெண்ணையும்  இணைக்கும் ஒரு சாய்தளம் போல் அமைந்திருக்கிறது இந்த வரி. இந்த வரியின் இசை சிவாஜியின் உடல் அசைவுக்கு  எந்த அளவுக்கு உந்துதலாக இருக்கிறது என்பதைக் காட்சியில் பார்க்கலாம். சிவாஜி நீச்சல் குளத்தின் படிகளில் ஏறி  உயரமான இடத்துக்கு வந்து விண்ணோடு என்ற வரி வரும்போது கையை உயர்த்திப் பிறகு கையைப் படிப்படியாக இறக்குகிறார். அவரது இந்த அசைவை இயக்குவது இந்த வரியின் இசைதான் என்பதை இந்தக் காட்சியைப் பார்க்கும் எவரும் உணர முடியும். 'புதையல்' படத்தில் வரும் 'விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே என்ற பாடலில் விண், முகில், நிலவு மூன்றுமே ஒரே தளத்தில் இருப்பதால் - விஞ்ஞான ரீதியாக அல்ல! -  அந்த வரி ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக இருப்பதை,விண்ணோடு விளையாடும்...' என்ற இந்த வரியுடன் ஒப்பிட்டால் எம் எஸ் வி வார்த்தைகளுக்குக்  கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்)

சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…
(ஜூலியஸ் சீசரைப் பற்றிய came, saw and conquered (veni, vici, vidi in Latin) என்ற வரிகளைப் பின்பற்றிக் கவிஞர் இதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.)

சிவாஜி: நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

பாலாஜி: உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
(எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்ற எண்ணத்தில்  நீ பார்த்தது போல் நான் பார்க்கவில்லை! நான் அவளை என் மனைவியாக நினைத்துத்தான் பார்த்தேன்!)

என் விழியில்
நீ இருந்தாய்
(என் விழி மூலம் பார்த்தது நீதான் என்கிறார் சிவாஜி. தான் பார்த்ததாக அவர் சொல்லவில்லை )

உன் வடிவில்
நான் இருந்தேன்
(சிவாஜி 'நீ' என்று சொன்னதற்கு மாறாக பாலாஜி 'நான்' என்கிறார்.  'நான்' என்ற சொல்  அவருடைய சுயநலத்தையும், உள் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது!)

 நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பான அம்சம் தாளம். பாடல் துவங்கும்போது இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கிறார்கள். அதனால் துவக்கத்தில் தாளம் ஒலிப்பது போல் தெரியாமலே ஒலிக்கிறது. அவ்வப்போது நீர்ப்பரப்பின் மீது நீர் சொட்டும் ஓசை போன்ற ஓசை பின்னணியில் மெலிதாகக் கேட்கிறது. சிறிது சிறிதாகத்  தாள ஒலி அதிகரிக்கிறது. முதல் சரணத்தின் இடையிலேயே, இருவரும் குளத்திலிருந்து ஏறி  வந்து விடுகிறார்கள். அப்போது தாளம் சற்று எடுப்பாக ஒலிப்பதை கவனிக்கலாம். ஸ்டீரியோ வசதிமில்லாத காலத்தில் இத்தனை நுணுக்கங்களைச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர்!

பாடலின் ராகம், பின்னணி இசை ஆகியவற்றின் அருமையை விவரிக்க இசையறிவு வேண்டும். அது எனக்கு இல்லை. அதனால் தென்றல் போல் மென்மையாக வந்து தழுவும் முகப்பிசையையும், இரண்டாவது சரணத்துக்கு முன்பு வரும் ஷெனாய் இசையையும் மட்டும் குறிப்பிட்டு விட்டு என் ரசிப்புரையை முடித்துக் கொள்கிறேன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக