புதன், 28 பிப்ரவரி, 2018

38. பட்டுச்சிறகு விரிப்பும் முத்துப்பல் சிரிப்பும்!

சிறந்த ஓவியர்கள், கவிஞர்கள், பிற கலை இலக்கியப்  படைப்பாளிகள் ஆகியோரின் படைப்புகளை ஆராயும்போது கலை, இலக்கிய ஆய்வாளர்கள் (connoisseurs), ஒரு கலைஞனின் படைப்புகளுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டறிவார்கள்.

சில சமயம், ஒரு ஓவியம் யார் தீட்டியது என்பது தெரியாத நிலையில், அந்த ஓவியத்துக்கும், குறிப்பிட்ட ஓவியரின் பிற ஓவியங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து அந்த ஓவியத்தைத் தீட்டியவர் அந்த ஓவியர்தான் என்று முடிவு செய்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது.

மெல்லிசை மன்னரின் சில பாடல்களுக்கிடையே இருக்கக்கூடிய சில பொதுவான இசை அம்சங்களை நான் கவனித்து வியந்திருக்கிறேன்.

ராகங்கள் பற்றிய அறிவு இல்லாத நிலையில் இசை ஆர்வம் கொண்ட ஒரு பாமர ரசிகனாகவே இந்த ஒற்றுமைகளை நான் கவனித்திருக்கிறேன்.
அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்களுக்குள் இருக்கும் ஒற்றுமை வேறு. இது பற்றி நான் இன்னொரு பதிவில் எழுதியிருக்கிறேன். ஆனால் இங்கே நான் குறிப்பிடும் ஒற்றுமைகள் வேறு சந்தங்களில் அமைந்த பாடல்களுக்கிடையே உள்ள ஒற்றுமை.

ஏ எல் ராகவன் அவர்கள் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒவ்வொரு பாடலும் முத்தான பாடல்! எங்கிருந்தாலும் வாழ்க, அன்று ஊமைப் பெண்ணல்லோ, கால்கள் நின்றது  நின்றதுதான், திங்களுக்கு இன்று என்ன திருமணமோ, காதல் என்றால் ஆணும் பெண்ணும், பட்டுச்சிறகு கொண்ட  சிட்டுக்குருவி, இங்கே தெய்வம் பாதி  ஒன்று என்ற பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

இவற்றில் 1964ஆம் ஆண்டு வெளியான கருப்புப்பணம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக்குருவி ஒன்று' என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். ஏ எல் ஆரும் எல் ஆர் ஈஸ்வரியும் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல் பட்டுச் சிறகால் நம்  உடலை வருடுவது போல் நம் மனதை வருடி விட்டுச் செல்லும் இனிய தன்மை கொண்டது. 'பட்டு' என்ற சொல் பாடலில் இருந்தாலே அந்தப் பாட்டில் ஒரு அலாதியான மென்மையை (மேன்மையை)ப் புகுத்தி விடுவார் எம் எஸ் வி. 'பட்டிலும் மெல்லிய பெண் இது' என்ற பாடலிலும் இந்த மென்மையை உணர முடியும்.

முகப்பு இசையைக் கேட்டதுமே நமக்கு ஒரு ஈர்ப்பு  ஏற்படும். பிறகு பல்லவியைக் கேட்டால் இப்படி ஒரு ராகமா  என்று பிரமிக்கத் தோன்றும். இது போன்ற ஒரு நீளமான பல்லவிக்கு இப்படி ஒரு டியூன் போட மெல்லிசை மன்னர் ஒருவரால் மட்டுமே முடியும்! பிறகு வரும் இணைப்பிசை நம்மைப் பிடித்து இழுக்கும். சரணமோ பல்லவிக்குச் சவால் விடும் அளவுக்கு இருக்கும். இந்தப் பாடலில் இனிமையில் விஞ்சி நிற்பது பல்லவியா சரணமா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இணைப்பிசை முதல் சரணத்துக்கு முன் வருவது போன்றதுதான் என்றாலும், இதில் ஒரு சிறிய ஹம்மிங்கைக் கொடுத்து  ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மனிதர்! (இந்த ஹம்மிங் பலே பாண்டியா படத்தில் வரும் 'ஆதி மனிதன் காதலுக்குப் பின்' என்ற பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங்கை ஒத்திருப்பது இன்னொரு ஒற்றுமை!)

தென்றலைப்போல்சு நம்மைக் குளிர்விக்கும் சுகமான, இதமான, திகட்டாத பாடல் இது.


இப்போது 1973ஆம் ஆண்டு வந்த பூக்காரி படத்தில் இடம் பெற்றுள்ள 'முத்துப்பல் சிரிப்பென்னவோ' பாடலை எடுத்துக் கொள்வோம்.





இந்த இரண்டு பாடல்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகக் கேட்டாலும் இரண்டு பாடல்களும் வெவ்வேறு தளத்தில் அமைந்ததாகத்தான் தோன்றும். ஆனால் இரு பாடல்களின் சரணங்களை மட்டும் கவனமாகக் கேட்டால் அவை ஒரே மாதிரி இருப்பதை உணர முடியும்.

இசை நுணுக்கங்கள் அறிந்தவர்களும், கீபோர்டில் பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றவர்களும் இரு பாடல்களுக்கும் உள்ள மற்ற ஒற்றுமைகளைக் கண்டறிய (கேட்டறிய)க்  கூடும். நான் குறிப்பிட்டிருப்பது மேலோட்டமாக எனக்குப் புலப்பட்ட ஒற்றுமையைத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக