வெள்ளி, 30 மார்ச், 2018

40. லொள் லொள் லொள் லொள்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயரிப்பான 'பாசவலை'  (1956ஆம் ஆண்டு வெளியானது) படத்துக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சில பாடல்கள் எழுதினார். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்  டி  ஆர் சுந்தரம் (டி ஆர் எஸ்) கண்டிப்புக்குப் பெயர் போனவர். அவர் அறையில் அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். அவர் அறைக்கு யார் வந்தாலும் நின்றுகொண்டேதான் பேச வேண்டும்!

பட்டுக்கோட்டை கம்யூனிஸத்தில் ஈடுபாடு கொண்டவர்.  'கல்யாண பரிசு' படத்தில் வரும் 'வாடிக்கை மறந்ததும் ஏனோ?' என்ற காதல் டூயட்டில் கூட,

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ?

என்று 'புரட்சி' என்ற சொல்லை வைத்திருப்பார். அவருக்கு சுயமரியாதை அதிகம் உண்டு.

ஒருமுறை டி ஆர் எஸ்  அவரைக் கூப்பிட்டு ஒரு பாடல் எழுதுவதைப்பற்றிப் பேசினார். சிறிது நேரத்தில் பட்டுக்கோட்டை அவர் அறைக்குள் வந்து அவரிடம் ஒரு தாளை நீட்டினார். 'அதற்குள்ளாகவா பாட்டு எழுதி விட்டார்?' என்று வியந்தபடியே தாளைப் பிரித்துப் பார்த்தார் டி ஆர் எஸ். அதில் 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவும்' என்று எழுதியிருந்தது. அதற்குப் பிறகு டி ஆர் எஸ்  தம் அறைக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை உட்காரச் சொன்னார் .

இந்தப் படத்துக்காக

'உன் கண்ணைக் கேளு சொல்லும்
அதில் காதல் மீன்கள் துள்ளும்'

என்று பட்டுக்கோட்டை ஒரு பாட்டு எழுதியிருந்தார். அதற்கு இசை அமைக்கப்பட்டு ஜிக்கியின் குரலில் பாடல் பதிவு செய்யபட்டது. 

பாட்டைக் கேட்ட டி ஆர் எஸ், 'இந்தப் பாட்டைப் பாடுபவர் ஒரு புதுமுகம். எனவே பாடல் வரிகள் இலக்கியத் தரமாக இல்லாமல்,  எளிமையாக இருக்க வேண்டும்' என்றார்.

தான் ஒரு நல்ல பாடல் எழுதியும் அது ஏற்றுக்கொள்ளப்படாததால் பட்டுக்கோட்டை மனம் நொந்து விட்டார். வேறொரு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவு செய்து படத்திலிருந்து விலகி விடத் தீர்மானித்தார்.

அப்போது இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், "ஏதாவது எளிமையா எழுதுங்க.. மச்சான் ஒன்னைப் பாத்து மயங்கிப்போனேன் நேத்து' என்கிற மாதிரி" என்று யோசனை சொன்னார். ( இது போல் பல பாடல்களுக்கு எம் எஸ் வி மனம் போன போக்கில் சொன்ன வரிகள் கண்ணதாசன் வாலி போன்றோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன!.)

'இதையே முதல் வரியாக வைத்துக் கொள்கிறேன்' என்று சொன்ன பட்டுக்கோட்டை பாட்டை எழுதி முடித்தார். இசை அமைக்கும்போது,எம் எஸ் வி  'லொள் லொள் லொள் லொள்' என்ற வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்டார். பாடல் ஹிட் ஆகி விட்டது. அத்துடன் இந்தப் பாடலுக்கு நடித்த புதுமுக நடிகை ராஜாமணி'லொள் லொள் ராஜாமணி' என்று அழைக்கப்பட்டார்! 

இந்த நிகழ்ச்சியை மெகா டிவியில் ஒளிபரப்பப்பட்டஎன்றும்  எம் எஸ் வி நிகழ்ச்சியிலும் வேறு சில நிகழ்ச்சிகளிலும் எம் எஸ் வியே  விவரித்திருக்கிறார். 

கீழே உள்ள வலைத்தளத்தில் லொள் லொள் என்ற பாட்டை  கிளிக் செய்தால் எம் எஸ் வி இந்த நிகழ்ச்சியை விவரிப்பதைக் கேட்கலாம்.

https://gaana.com/album/paasa-valai

youtubeஇல் பாடலைக் கேட்க:





'பாசவலை' படம் பற்றி ஹிந்து பத்திரிகையில் 14-06-2012 அன்று ராண்டார் கை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்தப் பாடல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ( பட்டுக்கோட்டை டி ஆர் எஸ் விரும்பியபடி பாட்டு எழுத விரும்பாமல் படத்திலிருந்து விலகி விட்டதாகவும், டி ஆர் எஸ் அடியாட்களை அனுப்பி, பட்டுக்கோட்டையை அழைத்து வர வைத்ததாகவும் இந்தக் கட்டுரையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது!)

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paasavalai-1956/article3564081.ece

2 கருத்துகள்: