திங்கள், 5 மார்ச், 2018

39. 'குடிகாரன்' பேச்சு!

பழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு முறை வெவ்வேறு காட்சிகளில் ஒலிக்கும். ஒன்று மகிழ்ச்சி, இன்னொன்று சோகம் அல்லது ஒன்று நாயகி நாயகனைச் சீண்டும் விதத்தில் பாடுவது இன்னொன்று நாயகன் நாயகிக்கு பதிலடி கொடுப்பது (ஆணாதிக்கம் மிகுந்த (திரை)உலகில் ஆண் பெண்ணைச் சீண்டுவது, பெண் அதற்குப் பதிலடி  கொடுப்பது என்ற நடைமுறைக்கு இடமில்லை!) என்பவையாக இந்த இரண்டு பாடல் காட்சிகளும் (பெரும்பாலும்) இருக்கும். காட்சிகள் வேறுபடுவதால் பாடல் வரிகள் வேறுபடும். டியூன் அதேபோன்று இருந்தாலும் இசையமைப்பும் மாறுபடும்.

இரண்டு விதமாய் ஒலிக்கும் இத்தகைய பாடல்கள்' மெல்லிசை மன்னரின் (மன்னர்களின்) இசையில்தான் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. ஏ எம் ராஜாவின் இசையில் 'உன்னைக்கண்டு நானாட,' 'காதலிலே தோல்வியுற்றான்,' 'எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே,' தனிமையிலே இனிமை காண முடியுமா,' ஆர் சுதர்சனத்தின் இசையில் 'ஏமாறச் சொன்னது நானோ,' இளையராஜாவின் இசையில் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்,'  'வெள்ளைப்புறா ஒன்று,' 'என்னைப் பாடச்  சொல்லாதே,' போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்  இத்தகைய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.  ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் 1959ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதுமை  படத்தில் வரும் 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' பாடலில் தொடங்கி, 1989இல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தில் இடம் பெற்ற 'சின்னஞ்சிறு கிளியே பாடல் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்த வகைப் பாடல்கள்' இருக்கின்றன. இத்தகைய பாடல்களின் இரு வடிவங்களில் அவர் கையாண்டிருக்கும் வித்தியாசமான இசை அணுகுமுறை சுவாரசியமானது.

1964ஆம் ஆண்டு வெளியான 'பணக்கார குடும்பம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் 'அத்தை மகள்  ரத்தினத்தை' பாடலை எடுத்துக் கொள்வோம்.

முதலில் நாயகி (சரோஜாதேவி) நாயகனை ( எம் ஜி ஆரை)ச்  சீண்டுவது போல் பாடுகிறார். கண்ணதாசன் பாடல் வரிகளை அனாயாசமாக எழுதி இருக்கிறார். பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு கேள்வியாக அமைந்திருக்கிறது.

அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்னநடை சின்னஇடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்திவிழி வீ ச்சு அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா?*
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட  மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப்பாதி கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா?
மேடைதனில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா?

* இந்த வரியைப் புரிந்து கொள்ள கோனார் உரை தேவைப்படலாம்!. 'கண்ணுக்கு எதிரே இருக்கும் நாயகனை ரசிக்காமல் முன்னழகு இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறது. நாயகிக்கு முன்னே நிற்கும் நாயகனைப் பார்க்க முடியவில்லையே என்று பின்னழகு ஏங்குகிறது' என்று நான் பொருள் கொள்கிறேன்!

சரியான இடங்களில் வார்த்தைகளை நிறுத்தி எம் எஸ் வி போட்டிருக்கும் டியூன் தேனைப் போன்ற இனிமை கொண்டது. அவர் போட்டிருக்கும் நூற்றுக்கணக்கான 'ஹம்மிங்'களில், சீண்டலை வெளிப்படுத்தும்  இந்த 'ஒஹோ ஒஹோ ஒஹோ' ஒரு தனி ரகம். (இன்னொரு சீண்டல் பாடலான 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் 'அஹஹஹா அஹஹஹா அஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா'வுடன் இதை ஒப்பிடலாம்.)

'பப்பப்பப்பப்பப்பப்பப்பப் பபபபபபா' என்று வரும் இடையிசை எம்ஜிஆரை மட்டும் இன்றி பாட்டைக் கேட்கும்  நம்மையும்  இழுத்துப் பிடிக்கிறது' அதற்குப் பிறகு வரும் டுடுடூ டுடுடூ என்ற இசையில் ஒரு சீண்டல் தொனி ஒலிக்கிறது. 'முத்து முத்துப் பேச்சு......' என்ற வரிக்குத் தான் போட்டிருக்கும் டியூனை ரசித்த மெல்லிசை மன்னர் அதை மீண்டும் வாத்தியத்தில் ஒலிக்கச் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

சரணத்தில் ஒவ்வொரு வரியிலும் டியூனில் மாறுபாடு தெரிகிறது. முதல் சரணத்தில் வரும் மூன்றாவது அடியான 'முத்திரையைப் போட்டு...' என்ற வரி மற்ற மூன்று வரிகளை விடச் சற்று நீளமாக அமைந்திருப்பதால் அதை மடக்கி டியூன் அமைத்திருக்கிறார். ஆனால் இரண்டாவது சரணத்தின் மூன்றாவது அடியான 'விட்டுப் பிரிந்தாலும்..' என்ற வரி அதிக நீளத்தில் இல்லை. ஆயினும் இந்த வரியையும், முதல் சரணத்தில் வரும் மூன்றாம் அடியைப் போலவே அமைத்திருக்கிறார் மன்னர்!

சரோஜாதேவியின் நடன அசைவுகள்  மிக நளினம். சற்றும் விரசம் தொனிக்காமல் எழிலுடனும், கண்ணியத்துடனும் பாடல் வரிகளை அபிநயம் பிடித்துக் காட்டுவதில் 'அபிநய சரஸ்வதி'க்கு நிகர் எவரும் இல்லை என்பது என் கருத்து. 'அன்ன நடை,' 'சின்ன இடை,'  'முன்னழகு தூங்க,' 'முத்திரையைப் போட்டு' போன்ற வரிகளுக்கான அவரது அபிநயத்தை கவனியுங்கள்.

பாடலை இங்கே கண்டு, கேட்டு ரசிக்கலாம்.


இரண்டாவதாக வரும் பாடல் நாயகிக்கு நாயகன் பதிலடி கொடுக்கும் பாடல். காதல் தோல்வியால் விரக்தி அடைந்து குடித்தது போல் நடித்து நாயகியைக்  கலவரப்பட்ட வைக்கும் வகையில் நாயகன் பாடும் பாடல் இது.

குடிகாரன் பேச்சாக ஒலிக்கும் இந்தப் பாடலில் இப்படி ஒரு கவிநயமா? பிரமிக்க வைக்கிறார் கண்ணதாசன். ஏதோ கம்பராமாயணம் போன்ற ஒரு காவியத்தை எழுதுவது போல் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் கண்ணதாசன்.

 அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்னநடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டுவிழி வீசி சின்னமொழி பேசி சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கறும்புச் சாறும் தென்னை இளநீரும் தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ணரதம் காண வந்திருந்த மன்னன் வானரதம்** தேடுகிறான்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை எண்ணி எண்ணி வாடுகிறான்

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன் காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மணமேடை நாடகத்தில் ஆடும் கோலத்தைக் களைத்து விட்டேன்.
அன்னை மீதாணை தந்தை மீதாணை என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம் அதுவரை தடுக்காதே

(**'வானரதம் தேடுகிறான்' என்ற வார்த்தைகளுக்கு காதல் தோல்வியால் மனமுடைந்து வானுலகம் செல்ல விரும்புகிறான்.' என்று பொருள் கொள்ளலாம். அல்லது குடித்து விட்டு போதையில் வானில் மிதப்பது போல் மிதக்க விரும்புகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.)

நாயகன் கிணற்றுக் கட்டையின் மீது நடப்பதும், அவன்  போதையில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுவாரோ என்று நாயகி பதறுவதுமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சிதான் கே.விஸ்வநாத்தின் 'சலங்கை ஒலி படத்தில் கமல் குடிபோதையில் கிணற்றின் மீது நடந்தபடி 'தகிட தகிட தகிட தந்தானா' என்று பாடும் காட்சிக்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாடல் துவங்கும்போதே எம் எஸ் வியின் இசையில் வாத்தியக்  கருவிகள் (குடிபோதையில்!) தள்ளாடுகின்றன. ஹம்மிங்கில் போதை தெரிவதில் வியப்பில்லை. ஆனால் ஹம்மிங்கைத் தொடர்ந்து வரும் சீட்டியில் (விசில்) கூட  போதை தெரிவது வியப்பளிக்கிறது. விசில் அடித்தவர் அநேகமாக 'நெஞ்சத்திலே நீ நேற்று வாந்தாய்' பாடலில் விசில் அடித்த எம் எஸ் ராஜு (மாண்டலின் ராஜு)வாக இருக்கலாம். எம் எஸ் வியே விசில் அடிப்பதில்  பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

போதையுடன் ஒலிக்கும் பல்லவிக்குப் பின் வரும் வேகமான இசை நாகேஷின் அற்புதமான நடனத்துக்கு உதவும் வகையில் பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டபோது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கிராமஃபோன் இசைத்தட்டில் இந்த வேகமான இசை இடம் பெறவில்லை என்று நினைவு. சில வினாடிகளே வந்தாலும் நாகேஷின் நடன அசைவுகள் வியக்க வைப்பவை.

பாடல் இதோ



ஒரு சாதாரணப் படக் காட்சிக்கான பாடலை ஒரு அற்புதமான கலைப்படைப்பாக மாற்றுவது கண்ணதாசனுக்கும் எம் எஸ் விக்கும் ஒரு பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது!

இந்த இரு பாடல்களும் எனக்கு அளிக்கும் போதையிலிருந்து என்னால் எளிதில் விடுபட முடிவதில்லை. விடுபட நான் விரும்பியதும் இல்லை!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக