புதன், 28 பிப்ரவரி, 2018

38. பட்டுச்சிறகு விரிப்பும் முத்துப்பல் சிரிப்பும்!

சிறந்த ஓவியர்கள், கவிஞர்கள், பிற கலை இலக்கியப்  படைப்பாளிகள் ஆகியோரின் படைப்புகளை ஆராயும்போது கலை, இலக்கிய ஆய்வாளர்கள் (connoisseurs), ஒரு கலைஞனின் படைப்புகளுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டறிவார்கள்.

சில சமயம், ஒரு ஓவியம் யார் தீட்டியது என்பது தெரியாத நிலையில், அந்த ஓவியத்துக்கும், குறிப்பிட்ட ஓவியரின் பிற ஓவியங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து அந்த ஓவியத்தைத் தீட்டியவர் அந்த ஓவியர்தான் என்று முடிவு செய்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது.

மெல்லிசை மன்னரின் சில பாடல்களுக்கிடையே இருக்கக் கூடிய சில பொதுவான இசை அம்சங்களை நான் கவனித்து வியந்திருக்கிறேன்.

ராகங்கள் பற்றிய அறிவு இல்லாத நிலையில் இசை ஆர்வம் கொண்ட ஒரு பாமர ரசிகனாகவே இந்த ஒற்றுமைகளை நான் கவனித்திருக்கிறேன்.
அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்களுக்குள் இருக்கும் ஒற்றுமை வேறு. இது பற்றி நான் இன்னொரு பதிவில் எழுதியிருக்கிறேன். ஆனால் இங்கே நான் குறிப்பிடும் ஒற்றுமைகள் வேறு சந்தங்களில் அமைந்த பாடல்களுக்கிடையே உள்ள ஒற்றுமை.

ஏ எல் ராகவன் அவர்கள் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒவ்வொரு பாடலும் முத்தான பாடல்! எங்கிருந்தாலும் வாழ்க, அன்று ஊமைப் பெண்ணல்லோ, கால்கள் நின்றது  நின்றதுதான், திங்களுக்கு இன்று என்ன திருமணமோ, காதல் என்றால் ஆணும் பெண்ணும், பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக்குருவி, இங்கே தெய்வம் பாதி  ஒன்று என்ற பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

இவற்றில் 1964ஆம் ஆண்டு வெளியான கருப்புப்பணம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக்குருவி ஒன்று' என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். ஏ எல் ஆர் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல் பட்டுச் சிறகால் நம்  உடலை வருடுவது போல் நம் மனதை வருடி விட்டுச் செல்லும் இனிய தன்மை கொண்டது. 'பட்டு' என்ற சொல் பாடலில் இருந்தாலே அந்தப் பாட்டில் ஒரு அலாதியான மென்மையை (மேன்மையை)ப் புகுத்தி விடுவார் எம் எஸ் வி. 'பட்டிலும் மெல்லிய பெண் இது' என்ற பாடலிலும் இந்த மென்மையை உணர முடியும்.

முகப்பு இசையைக் கேட்டதுமே நமக்கு ஒரு ஈர்ப்பு  ஏற்படும். பிறகு பல்லவியைக் கேட்டால் இப்படி ஒரு ராகமா  என்று பிரமிக்கத் தோன்றும். இது போன்ற ஒரு நீளமான பல்லவிக்கு இப்படி ஒரு டியூன் போட மெல்லிசை மன்னர் ஒருவரால் மட்டுமே முடியும்! பிறகு வரும் இணைப்பிசை நம்மைப் பிடித்து இழுக்கும். சரணமோ பல்லவிக்குச் சவால் விடும் அளவுக்கு இருக்கும். இந்தப் பாடலில் இனிமையில் விஞ்சி நிற்பது பல்லவியா சரணமா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இணைப்பிசை முதல் சரணத்துக்கு முன் வருவது போன்றதுதான் என்றாலும், இதில் ஒரு சிறிய ஹம்மிங்கைக் கொடுத்து  ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மனிதர்! (இந்த ஹம்மிங் பலே பாண்டியா படத்தில் வரும் 'ஆதி மனிதன் காதலுக்குப் பின்' என்ற பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங்கை ஒத்திருப்பது இன்னொரு ஒற்றுமை!)

தென்றலைப்போல்சு நம்மைக் குளிர்விக்கும் சுகமான, இதமான, திகட்டாத பாடல் இது.


இப்போது 1973ஆம் ஆண்டு வந்த பூக்காரி படத்தில் இடம் பெற்றுள்ள 'முத்துப்பல் சிரிப்பென்னவோ' பாடலை எடுத்துக் கொள்வோம்.





இந்த இரண்டு பாடல்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகக் கேட்டாலும் இரண்டு பாடல்களும் வெவ்வேறு தளத்தில் அமைந்ததாகத்தான் தோன்றும். ஆனால் இரு பாடல்களின் சரணங்களை மட்டும் கவனமாகக் கேட்டால் அவை ஒரே மாதிரி இருப்பதை உணர முடியும்.

இசை நுணுக்கங்கள் அறிந்தவர்களும், கீபோர்டில் பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றவர்களும் இரு பாடல்களுக்கும் உள்ள மற்ற ஒற்றுமைகளைக் கண்டறிய (கேட்டறிய)க்  கூடும். நான் குறிப்பிட்டிருப்பது மேலோட்டமாக எனக்குப் புலப்பட்ட ஒற்றுமையைத்தான்.

சனி, 17 பிப்ரவரி, 2018

37. பொன் ஒன்று கண்டேன்

1962ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் 'படித்தால் மட்டும் போதுமா.'

பாலாஜி, சிவாஜி இருவரில், அண்ணன் பாலாஜி படித்தவர், தம்பி சிவாஜி படிக்காதவர். இருவருக்கும் முறையே படித்த பெண்ணான ராஜசுலோசனா, படிக்காத பெண்ணான சாவித்திரி ஆகிய இருவரையும் மணமுடிக்க அவர்கள் பெற்றோர் உத்தேசித்து, பெண் பார்க்க ஏற்பாடு செய்யம்போது சகோதரர்கள் இருவரும் பெண் பார்க்க வெட்கப்படுவதால்(!), அண்ணனுக்குப் பார்த்த பெண்ணைத் தம்பியும், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனும் பார்ப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

அதுபோல் இருவரும் பெண் பார்த்து விட்டு வந்த பிறகு தாங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி வர்ணித்துப் பாடும் பாடல் இது.

இதற்கிடையே சிவாஜிக்குப் பார்த்த சாவித்திரியினால் கவரப்பட்ட பாலாஜி அவளைத் தானே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு, தன்னைப்  பற்றித் தவறான எண்ணம் ஏற்படும் விதத்தில், தனக்குப் பார்க்கப்பட்ட பெண்ணான ராஜசுலோசனாவின் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்புகிறார்.

பாலாஜி, சிவாஜி இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் அங்கங்கே மறைபொருளாகச் சில விஷயங்களை வைத்து இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர்.

விஸ்வநாதன் ராமாமூர்த்தியின் இசையில் மனதை வருடிக் கொடுப்பது போல் அலாதியான இனிமையுடன் அமைந்திருக்கும் இந்த அற்புதமான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தின் சாயலில் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள். 'ராகத்தின் சாயலில்' என்று நான் சொல்வதற்குக்  காரணம்,  சுப்புடு அவர்கள் கூறியது போல்  எம் எஸ் வியின் பாடல்கள் பெரும்பாலும் அவரது சொந்த ராகத்தில் அமைந்தவை என்பதுதான்!

பாடலில் கவிஞர் வைத்திருக்கும் உட்பொருளையும், எம் எஸ் வியின் நுணுக்கமான இசைச் செதுக்கல்களையும் பார்க்கலாம்.

(பாடலின் சில வரிகளில் மட்டும் - நான் கருத்துத் தெரிவித்திருக்கும் வரிகளில் மட்டும் - பாடியவர் சிவாஜி/பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறேன்.)

பல்லவி
சிவாஜி: பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
(தான் பார்த்தது தனக்கு அண்ணியாக வரப்போகிற பெண் என்பதால், அந்தப் பெண்ணைப் பற்றித் தான் வர்ணிப்பது முறையாகுமா என்ற பொருளில் 'சொல்லலாகுமா?' என்கிறார்.)

பாலாஜி: என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?
(மேலோட்டமாகப் பார்த்தால் 'அவளைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.' என்று பொருள் வரும்.  ஆனால் இதன் உட்பொருள் "நான் ஏன் அவளைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும்? அவளைத்தான் நானே கல்யாணம் செய்து கொள்வது என்று முடிவு செய்து விட்டேனே!')

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
என்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்காரச் சின்னம்
அலை போல மின்னும்
(அலை என்ற சொல் உச்சரிக்கப்படும் விதத்தைக் கேளுங்கள்!)

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
('துள்ளி வரும்' என்ற சொற்களே துள்ளி விழும் அழகை மெல்லிசை மன்னரின் இசையில்தான் காண முடியும்!)

துவண்டு விழும்
கொடி இடையாள்
(சொற்களே துவள்கின்றனவே!)

விண்ணோடு விளையாடும் பெண்
அந்தப்  பெண் அல்லவோ
(விண்ணோடு என்ற வார்த்தையில் மேல் தொனியில் துவங்கும் இசை படிப்படியாகக் கீழே இறங்கி பெண் அல்லவோ என்ற இடத்தில் கீழே வந்து விடுகிறது! விண்ணையும், மண்ணில் இருக்கும் பெண்ணையும்  இணைக்கும் ஒரு சாய்தளம் போல் அமைந்திருக்கிறது இந்த வரி. இந்த வரியின் இசை சிவாஜியின் உடல் அசைவுக்கு  எந்த அளவுக்கு உந்துதலாக இருக்கிறது என்பதைக் காட்சியில் பார்க்கலாம். சிவாஜி நீச்சல் குளத்தின் படிகளில் ஏறி  உயரமான இடத்துக்கு வந்து விண்ணோடு என்ற வரி வரும்போது கையை உயர்த்திப் பிறகு கையைப் படிப்படியாக இறக்குகிறார். அவரது இந்த அசைவை இயக்குவது இந்த வரியின் இசைதான் என்பதை இந்தக் காட்சியைப் பார்க்கும் எவரும் உணர முடியும். 'புதையல்' படத்தில் வரும் 'விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே என்ற பாடலில் விண், முகில், நிலவு மூன்றுமே ஒரே தளத்தில் இருப்பதால் - விஞ்ஞான ரீதியாக அல்ல! -  அந்த வரி ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக இருப்பதை,விண்ணோடு விளையாடும்...' என்ற இந்த வரியுடன் ஒப்பிட்டால் எம் எஸ் வி வார்த்தைகளுக்குக்  கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்)

சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…
(ஜூலியஸ் சீசரைப் பற்றிய came, saw and conquered (veni, vici, vidi in Latin) என்ற வரிகளைப் பின்பற்றிக் கவிஞர் இதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.)

சிவாஜி: நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

பாலாஜி: உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
(எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்ற எண்ணத்தில்  நீ பார்த்தது போல் நான் பார்க்கவில்லை! நான் அவளை என் மனைவியாக நினைத்துத்தான் பார்த்தேன்!)

என் விழியில்
நீ இருந்தாய்
(என் விழி மூலம் பார்த்தது நீதான் என்கிறார் சிவாஜி. தான் பார்த்ததாக அவர் சொல்லவில்லை )

உன் வடிவில்
நான் இருந்தேன்
(சிவாஜி 'நீ' என்று சொன்னதற்கு மாறாக பாலாஜி 'நான்' என்கிறார்.  'நான்' என்ற சொல்  அவருடைய சுயநலத்தையும், உள் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது!)

 நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பான அம்சம் தாளம். பாடல் துவங்கும்போது இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கிறார்கள். அதனால் துவக்கத்தில் தாளம் ஒலிப்பது போல் தெரியாமலே ஒலிக்கிறது. அவ்வப்போது நீர்ப்பரப்பின் மீது நீர் சொட்டும் ஓசை போன்ற ஓசை பின்னணியில் மெலிதாகக் கேட்கிறது. சிறிது சிறிதாகத்  தாள ஒலி அதிகரிக்கிறது. முதல் சரணத்தின் இடையிலேயே, இருவரும் குளத்திலிருந்து ஏறி  வந்து விடுகிறார்கள். அப்போது தாளம் சற்று எடுப்பாக ஒலிப்பதை கவனிக்கலாம். ஸ்டீரியோ வசதிமில்லாத காலத்தில் இத்தனை நுணுக்கங்களைச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர்!

பாடலின் ராகம், பின்னணி இசை ஆகியவற்றின் அருமையை விவரிக்க இசையறிவு வேண்டும். அது எனக்கு இல்லை. அதனால் தென்றல் போல் மென்மையாக வந்து தழுவும் முகப்பிசையையும், இரண்டாவது சரணத்துக்கு முன்பு வரும் ஷெனாய் இசையையும் மட்டும் குறிப்பிட்டு விட்டு என் ரசிப்புரையை முடித்துக் கொள்கிறேன்.






சனி, 12 ஆகஸ்ட், 2017

36. உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது

'பழனி' படத்தில் இடம் பெறும் 'உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா' என்ற இந்த டூயட் ஒரு எளிய கிராமிய அல்லது நாட்டுப்புறப் பாடல். Folk song என்ற பெயரில் மேற்கத்திய வாடை வீசுவதால், இந்தப் பெயரை நான் விரும்புவதில்லை. Folk song என்ற பெயரை மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும்!

மெல்லிசை மன்னரின் பாடல்களை நாட்டுப்புறப்  பாடல்கள் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டுப்புறப் பாடல் என்றால் பாடல் வரிகள், ராகம், இசைக்கருவிகள் எல்லாமே நாட்டுப்புறத்துக்கு உரிய எளிமையுடனும் இனிமையுடனும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இந்தப்பாடல்.

எனக்கு இசைக்கருவிகளைப் பற்றிய அறிவு கிடையாது. இந்த சுகமான பாடலில், பல்லவி முடிந்து அனுபல்லவி துவங்குமுன் வரும் இசை, தண்ணீர் பொங்கி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இடையிசை வயல்களிலும், வாய்க்கால்களிலும்  தண்ணீர் ஓடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் என் மாணவப் பருவத்தில் இந்தப் படலைக் கேட்டபோதே ஏற்பட்ட உணர்வுகள்!

மிக மிக இனிமையான ட்யூன். வேகமாக நகர்ந்து செல்லும் பாடல். 'சொல்லால் சொன்னால்' என்ற ஒரே மாதிரி தொனிக்கும்  இரு வார்த்தைகளில் 'சொன்னால்' என்ற வார்த்தையில் கூடுதல் இனிமையையும், கொஞ்சலையும் சேர்த்திருக்கும் மெல்லிசை மன்னரின் முத்திரைப் பதிப்பு. ஆஹா! தெளிவான நீரோட்டம் போல் என்னவொரு அருமையான பாடல்!

பல்லவிக்குப் பின்னால் 'ஆஹஹாஹா அஹஹா......' என்ற short hammingஇன்  மூலம் வெவ்வேறு தளங்களில் அமைந்துள்ள சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் லாகவம்!

இது ஒரு கனவுப்  பாடல். 'கனவு முடிந்து விட்டது எழுந்திரு' என்று கதாநாயகியை மெல்லத் தட்டி எழுப்புவது போல் ஒரு அருமையான முத்தாய்ப்பு இசையுடன்  முடிகிறது பாடல்! Typical MSV way of signing off!

கிராமஃபோன் இசைத்தட்டில் மூன்று சரணங்கள் உண்டு. 'வாழைத்தோட்டம் போட்டது போல்' என்ற இரண்டாவது சரணம் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. கீழே முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஆடியோ பதிவில்   மூன்று சரணங்களையம் கேட்கலாம். இரண்டாவது சரணத்தில் மாறுபட்ட இடையிசை அமைக்கப்பட்டிருப்பதையும்  ரசிக்கலாம்.

1. கிராமஃபோன் இசைத்தட்டு வடிவம்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது  - பழனி - 1965

2. திரைப்பட (வீடியோ) வடிவம்





வியாழன், 10 ஆகஸ்ட், 2017

35. எம் எஸ் வியின் தூக்கத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!


பெரிய இடத்துப்பெண் படத்துக்கு ஒரு பாடல் அமைக்க வேண்டும். இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் கண்ணதாசனுக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, அவர் வராததால் வீட்டுக்குப் போய் விட்டார்கள். அவர்கள் போய்ச் சற்று நேரம் கழித்துக் கண்ணதாசன் வந்தார். அன்றே பாடலை எழுதி முடித்து விடலாம் என்று நினைத்து, MSVஐ வரச்சொல்வதற்காக அவர் வீட்டுக்கு ஃபோன்
செய்தார். MSV தூங்கி விட்டார் என்று தகவல் வந்தது.

கண்ணதாசன் தன் உதவியாளரை வைத்துக்கொண்டு பாடலை எழுதி முடித்தார். பாடலை ஸ்டூடியோவில் ஒருவரிடம் கொடுத்து, 'பாட்டு எழுதி விட்டேன். விஸ்வநாதன் வந்ததும் டியூன் போடச் சொல்லுங்கள்' என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அவர் எழுதிய பாடல்;

"அவனுக்கென்ன தூங்கி விட்டான். அகப்பட்டவன் நான் அல்லவா!'

(குறிப்பு MSVஐ விட மூன்று வயது மூத்தவராகிய கண்ணதாசன் அவரை 'வாடா போடா' என்றுதான் பேசுவார்.)

இந்த நிகழ்ச்சியை மெல்லிசை மன்னரே பல முறை வானொலி/தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சொல்லாயிருக்கிறார்.

இந்தப் பாடலில் 
இதயத்தையும் கொடுத்து விட்டு 
இறக்கும் வரை  வரை துடிக்க விட்டான் 

என்ற வரிகள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.



பாடல் இதோ!




வியாழன், 20 ஜூலை, 2017

34. சூழல் ஒன்று - பாடல் இரண்டு

ஒரு ஊமைப்பெண்ணிடம் அவள் கணவன் தன்  காதலைச் சொல்லும் இரண்டு திரைப்படப் பாடல்கள். - ஒன்று 1966இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த கொடிமலரில் இடம்பெற்ற 'மௌனமே பார்வையால்' என்ற பாடல். மற்றொன்று பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த 'வாழ்வு என் பக்கம்'   படத்தில் இடம்பெற்ற 'வீணை பேசும்'  என்ற பாடல்.

கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் வந்த இரண்டு பாடல்களுமே ஒரே கருப்பொருளைக் கொண்டிருந்தாலும், இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.

முதலில் 'மௌனமே பார்வையால்' பாடலை எடுத்துக் கொள்வோம். இந்தப் பட நாயகியால் எந்த ஒரு ஒலியையும் எழுப்ப முடியாது. மாறாக 'வீணை பேசும்' நாயகியால் 'ம்ம்ம்ம்ம் ..' என்று ஹம்மிங்காவது செய்ய முடியும்.

அதனால்தான் கொடிமலர் பாடலை

'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்'

என்று துவங்குகிறார் கவிஞர். பாட்டுப் பாடச் சொன்னால் நாணத்தினால் தயங்குவது எவருக்குமே இயல்பு. இந்தப் பெண் பார்வையால் பாட்டுப் பாடுவதற்குக் கூட நாணப்படுவாளோ என்று நினைத்து, அப்படி நாணப்பட்டால், ஜாடை மூலம் ஒரு (ஓரிரு) வார்த்தையாவது என்னிடம் பேசு என்கிறான் நாயகன். அவளால் பேச முடியாதது தனக்கு ஒரு பொருட்டே இல்லை, அவள் பார்வையாலும், ஜாடையாலும் பேசுவதே தனக்கு இன்பம்தான் என்று உணர்த்துகிறான்.

(வாழ்வு என் பக்கம் நாயகியால் ஒலி எழுப்ப முடியம் என்பதால் வீணை தென்றல் போன்ற மென்மையான ஒலி எழுப்பும் பொருட்களை அவள் பேச்சுக்கு இணையாகக் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். மெல்லிசை மன்னரும் நாயகி ஹம்மிங் செய்வதாக அமைத்திருக்கிறார்.)

இப்போது சரணத்துக்கு வருவோம்.

அல்லிக்கொடியே உந்தன்
முல்லை இதழும் 
தேன் ஆறு போலப் பொங்கி
வர வேண்டும்.

பொதுவாக இதழ் தேனாறு போலப்  பொங்கி வர வேண்டும் என்றால் இனிமையான சொற்கள் அவள் வாயிலிருந்து வரவேண்டும் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கே நாயகியால் பேச முடியாது என்பதால் நாயகியின் இதழைச்  சுவைக்க வேண்டும் என்ற நாயகனின் விருப்பத்தையே இது குறிக்கிறது. இதன் மூலம் அவளிடம் அவனுக்கு இருக்கும் உடல் ரீதியான கவர்ச்சியை அவன் வெளிப்படுத்துகிறான்!

அங்கம் தழுவும் வண்ணத்
தங்க நகை போல் 
என்னை அள்ளிச் சூடிக்
கொண்டு விட வேண்டும்.

'நான் உன்னைத்  தாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லாமல்  'நீ என்னைச் சூடிக்கொள்ள வேண்டும் 'என்று கூறுவதன் மூலம் அவள் பலவீனமானவள் அல்ல, அவளை யாரும் தாங்கிப் பிடிக்க வேண்டியதில்லை என்பதை அவளுக்கு உணர்த்துகிறான். 'உடலைத்தழுவும் நகைபோல் என்னை நீ சூடிக்கொள்ள வேண்டும்'  என்ற வரியும் முந்தைய வரி உணர்த்திய அவள் உடற்கவர்ச்சியை உறுதி செய்கிறது.

முத்துச் சரமே என்

பக்கம் இருந்தால் 
வேறென்ன வார்த்தை
சொல்ல மொழி வேண்டும்?

நீ பேசாதது எனக்கு ஒரு குறையல்ல. நீ என் அருகில் இருந்தாலே போதும். பேச்சு எதற்கு?

முன்னம் இருக்கும் உன்
சின்ன முகத்தில் 
பல மொழிகள் பாடம் பெற
வர வேண்டும்!

ஆஹா! ஜாக்பாட்  அடித்திருக்கிறார் கவிஞர்.  வாயால்  பேச  முடியாததால் அவள் முகபாவங்களினால்தானே பேச முடியும்? அவள் தன் முகபாவங்களினால் பேசும் பேச்சு இருக்கிறதே,  அந்தப் பேச்சை முழுமையாக எழுத்தில் வடிக்க மொழிகளால் முடியாது. ஏனெனில் எந்த மொழியிலும் அவ்வளவையும் எழுத்தில் வடிக்கும் அளவுக்குச் சொல்வளம் இல்லை. எனவே மொழிகள் இவள் முகத்தை பார்த்து, இவள் முகபாவங்களைப்  படித்து நிறையப்  பாடம் கற்க வேண்டுமாம்!

தன்னால் பேச முடியவில்லையே என்று நினைக்கும் ஒரு பெண்ணுக்கு அவள் கணவனிடமிருந்து இதைவிடச் சிறப்பான பாராட்டோ, அங்கீகாரமோ இருக்க முடியுமா?  பேச முடியாத குறையை எவ்வளவு சிறப்பான  நிறையாக மாற்றி விட்டார் கவிஞர்!

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.


இப்போது இரண்டாவது பாடலுக்கு வருவோம். இங்கே கவியும், இசையும் வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றன.

நாயகியால் ஒலி எழுப்ப முடியும் என்பதால் 'வீணை பேசும்' என்று துவங்கியிருக்கிறார் கவிஞர்.

வீணை பேசும் 
அது மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் 
அது மோதும் மலர்களில் நின்று 

வீணை பேசும். யாரிடம்? அதை மீட்டும் விரல்களிடம். மற்றவர்களிடம் அது பேசாது என்பதால் வீணைக்குப் பேசத் தெரியாது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் வீணையை மீட்டும் விரல்களுக்குத் தெரியுமே (புரியுமே) அது தன்னிடம் பேசுவது!

இதே போல்தான் தென்றலும். தென்றல் மலர்களின் மீது நின்று அவற்றை உரசியபடியே பேசுவதால் தென்றல் பேசுவது மலர்களுக்குத்தான் தெரியும் (புரியும்). மற்றவர்களுக்கு அதன் ம்ம்ம்ம் என்ற ரீங்காரம் மட்டும் வேண்டுமானால் கேட்கலாம்.

அதேபோல் நாயகி 'பேசுவது  நாயகனுக்கு கேட்கும் புரியும். நாயகி ம்ம்ம்ம்  என்று ஒலி எழுப்புவதைக் குறிக்க மென்மையாக ஒலிக்கும் வீணையையும், தென்றலையும் உவமையாகச் சொல்லி இருப்பது எவ்வளவு இயல்பாக, சிறப்பாக இருக்கிறது! பாடலின் இடையிலும், இறுதியிலும்  மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் ஹம்மிங்கைக் கேட்டால் இந்த உவமானங்களுக்கு அவர் ஒலி வடிவம் கொடுத்திருப்பதை புரிந்து கொள்ளலாம்.

நாணம் ஒருவகைக் கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 

பதமான, சுகமான கவிதை வரிகள்! நாணம் பெண்களுக்கே உரித்தான தனிக்கலை! ஆண்களுக்கு அது ஒரு சுகம். மௌனம் ஒரு மொழி - பதமான மொழி. ஆங்கிலத்தில் silence is a subtle language என்பதின் பதமான தமிழ் வடிவம் இது என்று கொள்ளலாம். நாயகி மௌனம் என்ற பதமான மொழியில் பேசும்போது, அவளுக்குப் பேச்சு வராது என்று எப்படிச் சொல்ல முடியும்? நாயகியால் பேச முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அடித்துச் சொல்கிறான் நாயகன்.

தீபம் எப்போது பேசும் கண்ணே? தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே?

சாதாரணமாக வீட்டில் வெளிச்சத்துக்காக ஏற்றி வைத்திருக்கும் தீபத்துக்கும் தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைத்திருக்கும் தீபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபத்துக்கு மதிப்பும் மரியாதையும் உண்டே! தெய்வத்தை நம் கண்களுக்கு காட்டுவதே அந்த தீபம்தானே! 'நீ தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம்.'

தெய்வம் பேசாது. ஆனால் தெய்வத்தின் முன்னே ஏற்றி வைத்திருக்கும் தீபம் பேசும்.(தன்  ஒளியின் மூலம் நம்மை எல்லாவற்றையும் காணச்  செய்யும்.) நீயும் தெய்வமாய் இருந்து  எனக்குப் பல விஷயங்களை உணர்த்துவாய்.

இரண்டாவது சரணத்தில் அது முதல் இரவு என்பதை நினைவு படுத்துகிறான் நாயகன்.

காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் தெரிவது கவிதைக்கலை.
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வில் ஒன்றான பின்னே

வார்த்தை இல்லாத சரசம் இருவரும் காதலில் ஒன்று சேர்வதைக் குறிக்கிறது. இங்கே பேச்சு ஒரு பிரச்னையே இல்லை!

தாய்மை கொண்டாடு

நீ ஒரு தாய் ஆனதும் உனக்கு உன் குறை தெரியாது. (அதை நீ மறந்து விடுவாய்)

பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே!

ஆனால் இதற்குப் பல மாதங்கள் ஆகுமே! அதுவரை என்னையே குழந்தையாக நினைத்து உன் நெஞ்சில் அனைத்து என்னைத் தாலாட்டு.

இந்த இடத்தில் மெல்லிசை மன்னர் தாலாட்டு போன்ற ஒரு ஹம்மிங்கை கதாநாயகி பாடும்படி அமைத்திருக்கிறார். கதாநாயகனும் இந்த ஹம்மிங்கில் இணைந்து கொள்ள,  பாடல் முடிகிறது.

தாலாட்டுக்குப் பிறகு இருவரும் உறங்கி விடுவார்கள் என்பதால் வழக்கமாக எல்லாப் பாடல்களிலும் வருவதுபோல் மீண்டும் பல்லவியைப் பாடச் செய்யாமல் பாடலை இந்த இடத்தில் முடித்து விடுகிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகளைக் கூர்ந்து படித்து அவற்றின் பொருள் அறிந்து இசை அமைக்கும் எம் எஸ் வியின் பாணிக்கு இது இன்னும் ஒரு சான்று.

பாடலைக்  கேட்டு நீங்களும் கொஞ்ச நேரம் மெம்மறந்து இருங்களேன்!







திங்கள், 3 ஏப்ரல், 2017

33. அன்பு வந்தது

1971ஆம் ஆண்டு வெளிவந்த 'சுடரும் சூறாவளியும்' படத்தில் இடம் பெற்ற  'அன்பு வந்தது' என்னை ஆள வந்த ஒரு பாடல்.

இப்படி ஒரு இனிமை பொங்கி வழியும் பாடலா! இதை நான் முதலில் கேட்டது திரைப் படம் பார்த்தபோதுதான். திரைப் படத்தில் கொஞ்சம் செயற்கைத்தனம் இருந்தாலும், இந்தப் பாடலே இத் திரைப்படத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

முதல் முறை திரையில் கேட்டபோதே என்னை ஆட்கொண்ட பாடல் இது. ஒரு தந்தை தன் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டு பாடும் பாடலை கவிஞரைத் தவிர வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை.

'வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்,
வாடாமலர் போலே உங்களைக் காப்பேன்'

என்ற வரிகள் ஒரு தந்தையாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை என் மனதில் விதைத்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. ஏனெனில் நான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழும் வரிகள் இவை.

"கண்ணிரண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம்"

என்ற வரிகள் 'சோதனைகளைக் கண்டு கலங்காமல் வாழ்க்கையை எதிர் கொண்டால் , காலம்  நமக்கு கைகொடுக்கும்' என்ற வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான செய்தியை  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மென்மையாகச் சொல்லுகின்றன.

இதைத் தொடர்ந்து வரும்

"தாயில்லாத பிள்ளைதனை  நான் விட மாட்டேன்
 நான் இல்லாதபோதும்  தேவன் கைவிட மாட்டான்"

என்ற வரிகள் வரப்போகும் பிரிவையும் அதைத்தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளையும் முன்கூட்டி உரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.  தந்தை தன குழந்தைகளை விட்டுப் பிரிய நேர்கிறது. ஆனால் குழந்தைகள் வேறு யாராலோ வளர்க்கப்பட்டு வாழ்வில் மேன்மை அடைகிறார்கள். 'நான் இல்லாதபோதும்ம தேவன் கைவிட மாட்டான்' என்ற தந்தையின் நம்பிக்கை உண்மையாகிறது!

மெல்லிசை மன்னரின் உற்சாகமான இசை இந்தப் பாடலுக்கு ஒரு அலாதியான ஈர்ப்புசக்தியை வழங்கியிருக்கிறது. கேட்பவர்களைக் கட்டிப்போடும் இனிமையான இசை.

இந்தப் பாடல் ஒரு நகர்ப்புறச்  சூழலில் படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த
People's Park என்று அழைக்கப்பட்ட  மிருகக்காட்சி சாலையில் படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன். நகரச்  சுழ்நிலையையும், ஜெமினியின் உற்சாகமான மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் பின்னணி இசையும் அமர்க்களமாக இருக்கிறது.

இதே பாடலை  டி.எம் எஸ் பாடும் ன்னொரு வடிவம் மெல்லிசை மன்னருக்குக் கிடைத்த ஒரு அயனான வாய்ப்பு. டி எம் எஸ்ஸை விட எஸ் பி பியே இப்பாடலைச் சிறப்பகப் பாடியிருக்கிறார் என்று  youtubeஇல் ஒருவர் குறிப்பிட்டது டி எம் எஸ் ரசிகர் ஒருவரைக் கோபமூட்டியிருக்கிறது. இதற்குக் காரணம் மெல்லிசை மன்னர்தான்.

எஸ் பி பி பாடுவது மூலப் பாடல். டி எம் எஸ் பாடுவது அதை நினைவு கூர்ந்து. அதனால் அது மூலத்தை விட ஒரு மாற்றுக் குறைந்துதானே இருக்க வேண்டும்? மேலும் எஸ் பி பி பாடும்போது உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் பாடுகிறார். டி எம் எஸ் பாடலில் முத்துராமன் தன் தந்தையுடன் சிறு வயதில் இருந்ததை நினைத்துப் பாடுகிறார். அதனால் பாடலில் துள்ளல் எல்லாம் இல்லை. அவர் வாழ்க்கை நன்றாக இருப்பதால் சோகமும் இல்லை. மெலிதான ஏக்கம் மட்டும்தான் இருக்கிறது.  டி எம் எஸ் கொஞ்சம் அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

டி .எம்.எஸ். பாடுவது கிராமியச் சுழலில். அதற்கேற்பப் பாடல் வரிகளும் இசையும் மாறுபடுகின்றன!

'ஆறு வெள்ளம் போன பின்பும் ஆற்று மண்ணிலே
வரும் ஊற்று வெள்ளம் போல வந்து உறவு கொள்ளுவேன்'

என்று கிராமப்புற உதாரணம் மூலம் அண்ணன் தங்கைக்கு உறுதியளிப்பதை கவனியுங்கள். எவ்வளவு பொருத்தமான, ஆழமான பொருள் பதிந்த உதாரணம் இது! ஒருவேளை என்னிடம் செல்வம் இல்லாவிட்டாலும் எப்படியாவது உன்னைக் காப்பாற்றுவேன் என்ற உறுதி இது! கவிஞர் எழுதிய வரிகள் அல்லவா!

பாடலை ரசியுங்கள்.























வெள்ளி, 10 மார்ச், 2017

32. காலமிது, காலமிது


சித்தி படத்தில் இடம் பெறும் 'காலமிது, காலமிது' எப்போது கேட்டாலும் என் மனதைப் பிசையும் பாடல்.  சித்தி படத்தைப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். பாடலை அதற்கு முன் பல முறை வானொலியில் கேட்டு விட்டேன்.

பல சமயம் இப்பாடலை இரவு  10.30அல்லது 11 மணிக்கு மேல் சென்னை வானொலியில் ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்டபின் 'கண்ணுறக்கம் ஏது?' உறங்கக்கூட நேரமில்லாத பெண்களின் நிலையை இதை விட உருக்கமாக உலகில் வேறு எந்தக் கவிஞரும் சொல்லியிருக்க முடியாது!

பொதுவாகப் பெண்கள் ஓய்வின்றி உழைக்கிறார்கள் என்ற ஒரு இரக்க சிந்தனை என்னிடம் உண்டு. (என் மனைவி இதை ஒப்புக்கொள்வாரா என்பது எனக்குத் தெரியாது!) அதனாலேயே இந்தப் பாடலின்மீது எனக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.

ஒரு நண்பர் சுட்டிக் காட்டியது போல, ஒரு இடத்தில் இடையிசை கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது.  பத்மினி நின்றபடியே ஒரு முறை சுற்ற, குழந்தையும் அதுபோல் சுற்றும். இந்தச் செய்கையைக் காட்டும் விதமாகத்தான் இந்த இசை வேறுபாடு என்று நினைக்கிறேன். ரீ ரிகார்டிங் போல இதை எப்படி மெல்லிசை மன்னர் அமைத்தார்  என்பது வியப்பாக இருக்கிறது.

பாடல் காட்சியை இயக்குனர் முழுவதுமாக முன்பே தீர்மானித்து மெல்லிசை மன்னரிடம் விளக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.(வேறு சில பாடல்களில் இந்த 'முரணை' கவனித்திருக்கிறேன். 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா, ' ;நாடு அதை நாடு' பாடல்களிலும் இசை கொஞ்சம் திசை மாறிப் போவது போல் இருக்கும். முந்தைய பாடலில் எஸ் எஸ் ஆரின் அதிர்ச்சியையும், பிந்தைய பாடலில் சரோஜா தேவிக்கு நடக்கும் கண் அறுவைச் சிகிச்சையையும்  சித்தரிக்கவே இந்த வேறு பட்ட இசைப் பகுதிகள் என்பது பாடல் காட்சிகளைப் பார்த்தால்தான் விளங்கும்!)

"மாறும், கன்னி மனம் மாறும்' என்ற இடத்தில் இசை மாறுவதை கவனியுங்கள். 'மாறும்' என்ற வார்த்தையைக் குறிப்பதாகவே இந்த இசை மாற்றம். இரண்டு வரிகளுக்குப் பிறகு மீண்டும் முந்தைய சரணத்தின் ராகத்தில் போய் இணைந்து விடும் அழகை என்னவென்று சொல்வது!

பாடலின் இறுதியில்,

'கை  நடுங்கிக்  கண் மறைந்து காலம் வந்து தேடும்.
'காணாத உறக்கமெல்லாம் தானாகச் சேரும்'

என்ற வரி ஆழ்ந்த சோகக் கருத்தை உள்ளடக்கியது. முதுமையில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்திருக்கும்போதும், மீளாத் துயிலுக்கு ஆட்படும்போதுதான் ஒரு பெண்ணுக்கு உறங்க வாய்ப்புக் கிடைக்கும் என்ற உண்மை எவ்வளவு மனவலியை அளிக்கக் கூடியது!

இந்த வரியின்போது சுந்தரிபாய் உட்கார்ந்து கொண்டே தூங்குவது போல் காட்டி இந்த வரியின் ஆழ்ந்த பொருளை மங்கச் செய்து விட்டார் இயக்குனர் திலகம் என்பது என் பணிவான கருத்து. ஒரு வேளை இந்தப் படத்தை வந்த புதிதிலேயே நான் பார்த்திருந்தால் இந்த ஆழமான பொருள் எனக்குத் தோன்றாமலேயே போயிருக்கும்!

இந்தக் காலத்திலும் ஆழ்ந்து ரசிக்கக்கூடிய மிக அருமையான பாடல் இது.

பாடல் வரிகள் இதோ:

தொகையறா
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை
என்னரிய  கண்மணியே!
கண்ணுறங்கு கண்ணுறங்கு

பல்லவி
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

சரணம் 1 
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளு தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

சரணம் 2
மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கமென்பதேது?
தான் நினைத்த காதலனைச்
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது,
கண்ணுறக்கம் ஏது?

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன்நிலவில்
கண்ணுறக்கம் ஏது,
கண்ணுறக்கம் ஏது?

சரணம் 3
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னையென்று வந்த பின்பும்
கண்ணுறக்கம் போகும்,
கண்ணுறக்கம் போகும்,

கைநடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்,
தானாகச் சேரும்!