புதன், 5 ஜனவரி, 2011

8. An appeal To Mellisai Mannar

 Reproduction of my posting in msvtimes.com/forum on Dec 11, 2009

மெல்லிசை மன்னரிடம் நேரில் உரையாடும் நெருக்கம் எனக்கு இல்லை. அதனால் அவரின் அன்புக்குப் பாத்திரமான நமது அமைப்பின் மைய உறுப்பினர்கள் மூலம் மெல்லிசை மன்னருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்:

ஈடில்லாத தங்கள் இசை மூலம் என் வாழ்க்கைக்கு இனிமையும் சுவையும் மகிழ்ச்சியும் ஊட்டிய  மெல்லிசை மன்னரே,

வணக்கம்.
சுற்றி வளைக்காமல் என் வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.

தாங்கள் கம்ப ராமாயணப் பாடல்களுக்கு இசை அமைக்க வேண்டும். கவிஞரின் தமிழுக்கு உயிர் கொடுத்த நீங்கள், தமிழின் உயிருக்கும் இசை வடிவம் தர வேண்டும். இது உங்கள் சாதனைகளின் மணிமகுடமாக, உங்கள் Magnum Opus ஆக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

கம்ப ராமாயணம் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் கொண்ட ஒரு காப்பியம். பத்தாயிரம் பாடல்களுக்குமே நீங்கள் இசை அமைக்க வேண்டும் என்பது என் பேராசை. ஆயினும், காலம், வசதி போன்றவற்றைக்கருதி, நீங்கள் இதைப் பகுதி பகுதியாகச் செய்யலாம். உதாரணமாக, சுந்தர காண்டத்தில் துவங்கி திருமுடி சூட்டுப் படலத்தில் முடிக்கலாம். அல்லது இராமர் பிறப்பு, சீதா கல்யாணம், அனுமனின் அற்புதச் செயல்கள், இராம பிரான் மணி மகுடம் சூட்டல் என்று சில குறிப்பிட்ட படலங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது, ஓரிரு வருடங்கள் முன்பு, நடிகர் சிவகுமார், இராமாயணக் கதை முழுவதையும், தேர்ந்தெடுத்த நூறு பாடல்களில் சொல்லி முடித்தது போல், காப்பியம் முழுவதையும் தழுவும் வகையில், சில நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசை அமைக்கலாம்.

நீங்கள் இப்பணியை ஏற்பது என்று முடிவு செய்தால், இது குறித்துத் தமிழறிஞர்களின் ஆலோசனையைப் பெறலாம். குறிப்பாக, 'கம்பன் கழகம்' என்ற அமைப்பு உங்களுக்குப் பல விதங்களிலும் (பாடல்களின் சிறப்பான பொருளை விளக்குதல் போன்றவை) உதவ முன் வரும் என்று நம்புகிறேன். உங்கள் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் எஸ் பி எம் அவர்கள் கம்பன் கழகத்தின் முக்கிய உறுப்பினர்.

கம்பனின் அம்சங்கள் நிரம்பப் பெற்ற கண்ணதாசனின் பாடல்களுக்கும், இரண்டாம் கம்பன் என்று அழைக்கப்படும் வாலியின் பாடல்களுக்கும் இசை அமைத்திருக்கும் தாங்கள், தமிழ் மொழியின் தலையாய கவிஞரின் பாடல்களுக்கும் இசை அமைக்க, நாங்கள் அதைக் கேட்டு ரசிக்க வேண்டாமா? கவிச்சக்கரவர்த்தியின் பாடல்களுக்கு இசைச்சக்கரவர்த்தி இசை அமைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்?

'செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்'

என்று அனுமனை வர்ணிக்கிறான் கம்பன். இந்த வர்ணனை கம்பனுக்கும் பொருந்தும் என்பார்கள் தமிழ் அறிஞர்கள். நீங்கள் கம்பராமாயணத்துக்கு இசை அமைத்தால், இந்த வர்ணனை உங்களுக்கும் பொருந்தும்! திருத்தம் என்ற சொல்லுக்கு அழகு செய்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. ராமாயணம் என்னும் கதைத்தேனைக் கவித்தேன் ஆக்கி வழங்கினான் கம்பன். அந்தக் கவித்தேனை உங்கள் இசைத்தேனுடன் சேர்ந்து சுவைக்கும் அனுபவத்துக்கு ஈடாக வேறு எதுவுமே இருக்காது.

'இந்தப்பணி உங்களுக்கு ஒரு வேள்வியாக அமையும்' என்று சொல்ல விழைகிறபோது, என் உள்ளம் என்னைக் கேலி செய்கிறது. 'அட முட்டாளே, அவருடைய இசைப்பணி முழுவதுமே ஒரு வேள்விதானே? அதை மறந்து விட்டாயா?' என்று. பல யாகங்களைச் செய்தவர்கள் கூட, எல்ல யாகங்களுக்கும் சிகரகமாக 'அஸ்வமேத   யாகம்' என்ற மாபெரும் வேள்வியைச் செய்ய விழைவார்கள். அதுபோல், கம்பராமாயண இசை உங்களுக்கு ஒரு அஸ்வமேத யாகமாக அமையட்டுமே!

ராமாயணம் யுகங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் ஒரு காவியம். எங்கெல்லாம் ராமாயணக்கதை சொல்லப் படுகிறதோ, அங்கெல்லாம் அனுமன் நின்று கண்களில் நீர் வழிய அதைக் கேட்டுக் கொண்டு நிற்பான் என்பது மரபு வழி வந்த நம்பிக்கை ('அதைப் பார்த்திருப்பேன் கண்ணீல் நீர் எழுதி' என்ற உங்கள் இசையில் கேட்ட கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.) அனுமனைப் போற்றும் பாடலில், 'யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்' என்றுதான் வருகிறது. அனுமன் கூட ராமகாதையை இசை வடிவில் கேட்பதைத்தான் விரும்புகிறான். அதனால் உங்களின் இந்த மாபெரும் வேள்விக்கு அனுமன் துணை நிற்பான்!

மனித இனம் உள்ளவரை ராமாயணம் வாழும். ராமாயணம் வாழும் வரை அனுமன் பெயரும், கம்பன் பெயரும் நிலைத்து நிற்கும். இந்த இருவரின் பெயர்களோடு உங்கள் பெயரும் நிலைத்து நிற்கும்.

உங்கள் பணிக்கு முன்னோட்டமாக ஒரு சிறிய (சீரிய) பணியைச் செய்ய வேண்டுகிறேன். இதை ஒரு ரசிகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஒரு பாடல் பாடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு சிறிய பாடல். இது ஆய்ச்சியர் தயிர் கடைவதை வர்ணிப்பது. இந்தப் பாடலைச் சந்தத்துடன் பாடினால், மத்தினால் தயிர் கடையும் ஓசையைக் கேட்கலாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது போன்ற பாடல்களைச் ச்ந்தத்துடன் பாட, டி கே சி என்ற ஒரு தமிழறிஞர் இருந்தார். இன்று அப்படிப்பட்ட அறிஞர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனல் தாங்கள் இப்பாட்டுக்கு இசை அமைத்தால், அந்த ஒலி வெளிப்படும் என்பதில் ஐயமில்லை. 'சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்' என்ற பாடலைத் தறி ஓசை கேட்கும் சந்தத்தில் போட்டவராயிற்றே தாங்கள்! அன்பு கூர்ந்து இப்பாட்டுக்கு இசை அமைத்து மெகா டிவியில், என்றும் எம் எஸ் வி நிகழ்ச்சியின்போது இப்பாடலை உங்கள் அருமையான குரலில் பாடிக்காட்ட வேண்டும்.

தோயும் வெண்தயிர் மத்தொலி துள்ளவும்
தூய வெள்வளை வாய்விட்டரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.


கம்பராமாயணத்துக்குத் தாங்கள் இசை அமைக்க வேண்டும் என்ற என் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று அந்த இராமபிரான் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான நேரங்களைக் கொடுத்ததற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பெரியாழ்வார் கடவுளுக்கே பல்லாண்டு பாடினார். அவர் அடிச்சுவற்றைப் பின்பற்றி நானும் உங்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக