புதன், 5 ஜனவரி, 2011

13. வரிகளுக்கு உயிர் ஊட்டும் வல்லமை படைத்தவர் எம் எஸ் வி

பாடல்களில் வரும் சொற்களுக்கு உயிரூட்டி, அவற்றை நடமாட விடுவது மெல்லிசை மன்னருக்குக் கை வந்த கலை. எம் எஸ் வியின் ஒவ்வொரு படலிலும் இதை நம்மால் உணர முடியும்.

சாதாரண சொற்களையே சிற்பமாக வடிப்பவர், இசை,  நடனம் தொடர்பான வார்த்தைகள் வந்தால் அவற்றை விட்டு வைப்பாரா? நடனம் குறித்த வார்த்தைகளை அவர் எப்படி உயிர்ப்பித்திருக்கிறார் என்று நான் கவனித்து அனுபவித்த மூன்று இடங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது போல் பல உதாரணங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் (மணப்பந்தல்): 

இதில் இரண்டாவது சரணத்தில்,

'அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்'
என்று ஒரு வரி வருகிறது. இந்த வரியைத் தொடர்ந்து ஒரு மென்மையான நாட்டிய இசையைப் புகுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். மார்பில் நடனமாடுவது என்றால் நமக்கு ஒரு குழந்தை நம் மார்பின் மீது ஆடுவதுதான் நினைவுக்கு வரும். மார்பு மேடையாக இருக்கும்போது நடனம் மிக மென்மையானதாகத்தானே இருக்க வேண்டும்? அந்த மென்மையான இசையை இங்கே நாம் அனுபவிக்கலாம். இந்த இசையைக் கேட்கும்போதெல்லம் ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சுக் கால்களை உதைத்து  ஆடும் காட்சி தான் என் கண் முன் வரும்.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் இதற்கு இணையான வரி ('கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே')யைத் தொடர்ந்து ஒரு ஹம்மிங் தான் வரும். எனவே நடனம் என்ற வார்த்தைக்காகத்தான் இத்தகைய பின்னணி இசையை மெல்லிசை மன்னர் பயன் படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. உங்கள் உடனடி அனுபவத்துக்காகப் பாடலின் வலை இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறேன்.



2) என்ன பொருத்தம் (ரகசிய போலீஸ் 115): இதன் முதல் சரணத்தில்,

'நாட்டியம் ஆடட்டும் நாடகப் பாவை'

என்ற வரி வருகிறது.

இங்கே நாயகி நாயகன் மீது கோபமாக இருக்கிறாள் (நாயகியின் கோபமும், நாயகனின் கிண்டலான ரசிப்பும் பாடல் முழுவதுமே பின்னணி இசையிலும், பாடல் வரிகளின் உச்சரிப்பிலும் மிக அழகாகப் பின்னப் பட்டிருப்பது எம் எஸ் விக்கு மட்டுமே கை கூடக் கூடிய ஒரு அற்புதச் செயல்) அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நடன இசை அமைந்திருக்கிறது. நாட்டிய இலக்கணத்துக்கு இசைவான இசைதான். ஆனாலும் எதையோ போட்டு உடைப்பது போன்ற ஒரு ஆத்திரம் இதில் வெளிப்படுவதை, கேட்பவர்கள் எளிதாக உணரலாம். 'உனக்கு மட்டும்' பாடலில், மார்பின் மீது ஆடப்படும் நடனத்துக்கான மென்மையான இசைக்கு எதிர் விதமாக, மேடையே உடைந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றும் இசை இது.


3) ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம் எஸ் வி செயல் பட்ட கடைசிப் படம் இது என்று நினைக்கிறேன்.

இதில் முதல் சரணத்தில்,

'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'

என்ற வரிகளைத்தொடர்ந்து ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார்  அது ஒரு அற்புதம்.

இரண்டாவது சரணத்தில்,

'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'

என்று வரும்.

இந்த வரிகளைத்தொடர்ந்து வெறும் சலங்கை ஓசையையும் தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பேர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.



மூன்று பாடல்களுக்குமே வலை இணைப்பைக் கொடுதிருக்கிறேன். காரணம். என்னால் என் அனுபவத்தை முழுமையாகச் சொற்களில் விளக்க முடியவில்லை. இதைப் படிப்பவர்கள் உடனே இந்தப் பாடல்களையும் கேட்டால் என்னால் விளக்க இயலாத நுணுக்கங்களையும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள் என்பதால் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக