செவ்வாய், 4 ஜனவரி, 2011

3. A Tribute to MSV

மெல்லிசை மன்னரே!
நீங்கள்  உலகம் சுற்றும் வாலிபன் இல்லை
வாலிபன் சுற்றும் உலகம்!
என் போன்றவர்கள்
வாலிப வயதில்  சுற்றி வந்தது
உங்கள் இசையைத்தானே?

குமரிப்பெண்ணுக்காகக்
காத்திருந்த கண்கள் அல்ல
எங்களுடையவை.
குமரிக் கோட்டத்தைப் 
பார்த்தால் பசி தீரும்
என்றிருந்த இளைஞர்களிடையே,
உங்கள் இசையைக்
கேட்டால்தான் பசி தீரும் என்று
தவம் இருந்தவர்கள் நாங்கள்.

உங்கள் இசையிலேயே நாங்கள்
சொர்க்கம் கண்டதால்,
எங்களுக்குக்
காதலிக்க நேரமில்லை.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்று இருந்து விட்டோம்.
அன்னையும் பிதாவும்
காட்டிய வழியிலேயே   சென்றது
எங்கள் வாழ்க்கைப்படகு.

நம் நாட்டின் தவப்புதல்வரே!
நீங்கள் பிறந்த இடம் கேரளமாக இருந்தாலும்
நீங்கள்
எங்க  ஊர் ராஜா
எங்க வீட்டுப் பிள்ளை.
மெல்லிசை
மன்னவன் வந்தானடி
என்று நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம்.

பாலும் பழமும் கொடுத்துப்
பிள்ளையை வளர்ப்பார் சிலர்.
ஆனால்  உங்கள் தெய்வத்தாய்
உங்களைப்
பிள்ளையோ பிள்ளை
என்று கருதித்
தேனும் பாலும் கொடுத்து
வளர்த்திருப்பார்கள்  போலும்!
அதனால்தான்,
நினைத்தாலே இனிக்கும்
சுகமான ராகங்களைக்
கர்ணன் போல்
வாரி வழங்கி வருகிறீர்கள் நீங்கள்!

கேட்டதையெல்லாம் கொடுக்கும்
மரம் ஒன்று உண்டு
விண்ணுலகில்.
அதன் பெயர்  கற்பகம்.
ஆனால் நீங்களோ
நாங்கள் கேளாமலே
அள்ளித்தருகிறீர்கள்
உங்கள் இசை அன்பளிப்பை


நல்லிசையை
மெல்லிசையாய்   வடித்து
நீங்கள் தரும் பாடல்களைச்
சிலர் வசந்த ராகம் என்பார்கள்.
வேறு சிலர்
அபூர்வ ராகங்கள்
என்பார்கள்.
எங்களுக்கோ,
உங்கள் இசை
எங்கள் நாடி நரம்புகளில்
ஓடும் நதி.
என்றும் வற்றாத
ஜீவ நதி.
எங்கள் இதயங்களில்
ஒளிவிளக்காய்ச்
சுடர் விடும்
ஆனந்த ஜோதி
அணையா விளக்கு.

நீங்கள் ஒரு
கலைக்கோயில்.
ஏனெனில் உங்கள் நெஞ்சம்
இசை குடியிருத்த கோயில்.
(என்றும் குடியிருக்கும் கோயில்)
ஆயிற்றே?
உங்கள் படைப்புகள் எல்லாம்
அந்த இசைக்கோயில்
பூஜைக்கு வந்த மலர்.
இசை மீது
நீங்கள் வைத்திருக்கும்
பாசம்தான்
அதன் ஆலய தீபம்.

அவன்தான் மனிதன்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரத்தில் ஒருவன்
உயர்ந்த மனிதன்
இவையெல்லாம்
நீங்கள் இசை அமைத்த படங்கள்.
இவற்றுக்குப் பெயர் வைத்தவர்கள்
உங்களை மனதில் கொண்டுதான்
வைத்திருப்பார்களோ?

நீயும் நானும்
என்று  இணைந்திருக்கும்
நண்பர்கள்  பலர் உண்டு
இவ்வுலகில்.
ஆனால்,
உனக்காக நான், எனக்காக நீ
என்று வாழ்ந்தவர்கள்
நீங்களும் கவியரசரும்.
மெல்லிசை மன்னர்கள் இருவரும்
கவியரசரும் இணைந்தால்
அது ஒரு
திரிசூலம்.
எங்களுக்கோ,
நீங்கள்
மூன்று தெய்வங்கள்.

லக்ஷ்மி கல்யாணம்
உங்கள் சீர்வரிசையில்தானே  நடந்தது?
அனுபவி ராஜா அனுபவி என்று
கலாட்டா  கல்யாணத்துக்குப்
பச்சை விளக்கு காட்டியவரும்
நீங்கள்தான்!

இசைக்கடலில் பயணம் செய்யும்
பலருக்கு
நீங்கள் ஒரு
கலங்கரை விளக்கம்.
நல்லிசையை நாடித் திரியும்
இசை ரசிகர்களாம்
சாதகப் பறவைகளுக்கோ
நீங்கள் ஒரு
சரணாலயம்.

இது பாராட்டுரை அல்ல.
உங்கள் சாதனைகளுக்குத் தலை வணங்கி

நான்  சமர்ப்பிக்கும்
பாத காணிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக